ஆன்மிகம்
சிம்ம வாராஹி அம்மன், சரபசூலினி அம்பாள்

எதிர்காலம் சிறக்க எலுமிச்சை உத்தரவு: பிளாஞ்சேரி சரப சூலினி சன்னதியில் நடைபெறும் அதிசயம்

Published On 2021-02-01 03:11 GMT   |   Update On 2021-02-01 03:11 GMT
பிளாஞ்சேரி கோவிலில் நடைபெறும் ஜயமங்களா யாகத்தில் கலந்து கொண்டால் திருஷ்டி தோஷங்கள் அகலும், திருமணத்தடை நீங்கி மகிழ்ச்சியான இல்லற வாழ்க்கை அமையும்.
பைரவர் என்றாலே நம் நினைவுக்கு வருவது காசி மாநகரம்தான். காசியில், அஷ்ட பைரவர்களுக்கும் தனித்தனி கோவில்கள் அமைந்துள்ளன. காசிக்கு செல்லும் பக்தர்கள், அஷ்ட பைரவர்களையும் அவசியம் தரிசிக்க வேண்டும் என்பார்கள், பெரியோர்கள். தமிழகத்திலும் அஷ்ட பைரவர்கள் அருளும் ஒரு திருத்தலம் உண்டு.

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தில் இருந்து வடக்கே சுமார் 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள பிளாஞ்சேரிதான் அந்த திருத்தலம். இங்கே அருள்மிகு காமாட்சியம்மன் சமேதராக கோவில் கொண்டிருக்கிறார், அருள்மிகு கயிலாசநாதர். இந்தக் கோவிலில் தனித்தனி சன்னதிகளில் அஷ்ட பைரவர்களும் அருள்பாலிக்க, சரபசூலினியும் குடிக்கொண்டிருக்கிறாள்.

பவுர்ணமிதோறும் இங்கு மாலை 5 மணியளவில் ஜய மங்களா மகா யாகம் நடைபெறும். அப்போது, பிராச முனிவரும் சூட்சும வடிவில் வந்து அம்பிகையை வழிபடுவதாக ஐதிகம். பக்தர்கள் தாங்கள் தொடங்கும் காரியங்கள் தொடர்பாக அம்பிகை சரப சூலினியின் உத்தரவு கேட்க வருவார்கள். அவர்கள் கொண்டு வரும் எலுமிச்சைப்பழம், அம்பிகையின் திருமுடியில் வைக்கப்படும். `காரியத்தைத் தொடங்கலாம்’ என்பது அன்னையின் சித்தமானால், அந்த எலுமிச்சை அம்பிகையின் திருமுடியில் இருந்து தானாகவே இறங்கி விழுவது, இத்தலத்துக்கே உரிய அற்புதமாகும்.

அதேபோல், இங்கு நடைபெறும் ஜயமங்களா யாகத்தில் கலந்து கொண்டால் திருஷ்டி தோஷங்கள் அகலும், திருமணத்தடை நீங்கி மகிழ்ச்சியான இல்லற வாழ்க்கை அமையும், வம்ச விருத்தி உண்டாகும், இழந்த பதவிகளை மீண்டும் பெறலாம், வழக்குகள் சாதகமாகும்.

அதேபோல், ஜாதகத்தில் அபமிருத்யு தோஷம்(உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் கண்டம்) இருப்பவர்களுக்கும் சிறந்த பரிகாரத் தலம் இது. அவர்கள், தேய்பிறை அஷ்டமியன்று மாலை 6 மணியளவில் அஷ்ட பைரவர்களுக்கு நடைபெறும் சிறப்பு ஹோமங்கள் மற்றும் அபிஷேக ஆராதனைகளில் கலந்துகொண்டால், தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்’’ என்றார்.

அற்புதமான திருக்கதை, சாந்நித்தியம் மிகுந்த திருக்கோவில், அருள் வழங்கும் வழிபாடுகள்... இத்தகைய சிறப்புகள் மிகுந்த பிளாஞ்சேரி தலத்துக்கு நீங்களும் ஒருமுறை சென்று வாருங்கள். உங்கள் கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி வளமான வாழ்வைப் பெறுவீர்கள்!

Tags:    

Similar News