செய்திகள்
மெட்வதேவ் - ஜோகோவிச்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் - இறுதிப்போட்டியில் ஜோகோவிச் மெட்வதேவுடன் மோதல்

Published On 2021-09-11 08:05 GMT   |   Update On 2021-09-11 08:05 GMT
3 முறை அமெரிக்க ஓபன் பட்டத்தை கைப்பற்றிய ஜோகோவிச் 9-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளார்.

நியூயார்க்:

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.

இன்று காலை நடந்த ஆண்கள் ஒற்றையர் அரை இறுதியில் உலகின் முதல் நிலை வீரரான ஜோகோவிச் (செர்பியா)- 4-வது வரிசையில் உள்ள அலெக்சாண்டர் சுவரேவ் (ஜெர்மனி) மோதினார்கள்.

மிகவும் விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் ஜோகோவிச் முதல் செட்டை 4-6 என்ற கணக்கில் இழந்தார். ஆனால் அதற்கு அடுத்த செட்களில் ஜோகோவிச் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 2-வது செட்டை 6-2 என்ற கணக்கிலும், 3-வது செட்டை 6-4 என்ற கணக்கிலும் கைப்பற்றினார்.

ஆனால் 4-வது செட்டை சுவரேவ் 6-4 என்ற கணக்கில் வென்றார். இருவரும் தலா 2 செட் கைப்பற்றியதால், வெற்றியை நிர்ணயம் செய்யும் 5-வது மற்றும் கடைசி செட் ஆட்டம் மிகவும் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த செட்டை ஜோகோவிச் 6-2 என்ற கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். ஸ்கோர்: 4-6, 6-2, 6-4, 4-6, 6-2.

இந்த வெற்றியை பெற ஜோகோவிச்சுக்கு 3½ மணி நேரம் தேவைப்பட்டது. 3 முறை அமெரிக்க ஓபன் பட்டத்தை கைப்பற்றிய ஜோகோவிச் 9-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளார். இன்னும் ஒரு ஆட்டத்தில் அவர் வெற்றி பெற்றால் அதிக கிராண்ட்சிலாம் பட்டம் வென்றவர் மற்றும் ஒரே ஆண்டில் 4 கிராண்ட்சிலாம் வென்றவர் என்ற வரலாற்று சாதனையை படைப்பார்.

மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள டேனில் மெட்வதேவ் (ரஷியா)-கனடாவைச் சேர்ந்த பெலிக்ஸ் அகுர் அலிஸ்மி மோதினார்கள்.

இதில் மெட்வதேவ் 6-4, 7-5, 6-2 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.

அவர் 2-வது முறையாக அமெரிக்க ஓபனில் இறுதிப் போட்டிக்கு வந்துள்ளார்.இதற்கு முன்பு 2019-ல் இறுதிப் போட்டியில் நுழைந்து நடாலிடம் தோற்று பட்டத்தை இழந்தார்.

நாளை மறுநாள் நடைபெறும் இறுதி ஆட்டத்தில் ஜோகோவிச் - மெட்வதேவ் மோதுகிறார்கள்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் நாளை நடைபெறும் இறுதி ஆட்டத்தில் இளம் வீராங்கனைகளான எம்மா ராடுகானு (இங்கிலாந்து)- பெர்னாண்டஸ் (கனடா) மோதுகிறார்கள். முதல் கிராண்ட்சிலாம் பட்டத்தை வெல்லப்போவது யார்? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. 

 

 

Tags:    

Similar News