செய்திகள்
கைது

நூதன முறையில் பெண்ணிடம் ஆடுகள் மோசடி- சென்னையை சேர்ந்த 3 பேர் கைது

Published On 2021-07-16 09:23 GMT   |   Update On 2021-07-16 09:23 GMT
மயிலம் அருகே ரூ.2000 கள்ளநோட்டுகளை கொடுத்து நூதன முறையில் மோசடி செய்த சென்னையை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

மயிலம்:

விழுப்புரம் அருகே மயிலம் போலீஸ் சரகம் செண்டூர் கிராமத்தை சேர்ந்தவர் பழனி. அவரது மனைவி வசந்தா(வயது.54), இவர் ஆடுகளை வளர்த்து குடும்பம் நடத்தி வருகிறார்.

கடந்த 4 நாட்களுக்கு முன்பு இவர் வயல்வெளி பகுதிகளில் மேய்ச்சலில் இருந்த ஆடுகளை சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக ஓட்டிக்கொண்டு வீட்டிற்கு சென்றார். அப்போது விழுப்புரம் மார்க்கமாக இருந்து திண்டிவனம் நோக்கி ஆட்டோவில் வந்த பெண் உட்பட 3 பேர் வசந்தாவிடம் ஆடு விலைக்கு தரும்படி கேட்டுள்ளனர்.

வசந்தா மறுத்ததால், பணம் அதிகமாக தருவதாக ஆசை வார்த்தை கூறி 5 சிறிய ஆடு, ஒரு பெரிய ஆடும் வாங்கிக்கொண்டு 26 ஆயிரம் ரூபாய்க்கு 2000 ரூபாய் நோட்டுகளாக கொடுத்து விட்டு சென்றனர்.

பின்னர் வசந்தா வீட்டிற்கு சென்று இரவு அவரது மகளிடம் பணத்தை காண்பித்துள்ளார். அப்போது அந்த 2000 ரூபாய் நோட்டுகள் கலர் ஜெராக்ஸ் எடுக்கப்பட்ட கள்ள நோட்டுகள் என தெரியவந்தது. இதனையடுத்து மயிலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

போலீசார் வழக்கு பதவி செய்து நூதனமுறையில் கள்ளநோட்டு கொடுத்து மோசடி செய்த கும்பலை தேடி வந்தனர்.

விசாரணையில் இந்த ஆடு மோசடியில் சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த அப்துல் சலாம் மகன் ஷேக் ஆயுப் (வயது32), அவரது மனைவி பர்க்கத்பீ, சென்னை கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த அப்துல் ‌ஷரிப்(50), என தெரியவந்தது.

இவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து நடந்த விசாரணையில் இவர்கள் ஆந்திர மாநிலத்தில் இதேபோல் கள்ளநோட்டு கொடுத்து நூதன முறையில் ஆடு மோசடியில் ஈடுபட்டு உள்ளனர். கைதான 3 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 

Tags:    

Similar News