உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

நெல்லை அருகே பட்டப்பகலில் எரித்துக்கொல்லப்பட்ட பெண் யார்?- சி.சி.டி.வி. மூலம் விசாரணை தீவிரம்

Published On 2022-05-04 10:52 GMT   |   Update On 2022-05-04 10:52 GMT
நெல்லையை அடுத்த பேட்டையில் பெண் ஒருவர் எரித்துக்கொல்லப்பட்டுள்ளார். அவர் யார் என்று சி.சி.டி.வி. மூலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நெல்லை:

நெல்லையை அடுத்த பேட்டை ரொட்டிக்கடை பஸ் நிறுத்தம் பகுதியில் இருந்து பழைய பேட்டைக்கு இணைப்பு சாலையில் உள்ள ஆதம் நகர் பகுதியில் நேற்று பகலில் ஒரு பெண் உடல் எரிந்து கொண்டிருந்தது.

தகவல் அறிந்த பேட்டை போலீசார் அங்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். அதற்குள் பெண் உடல் முற்றிலுமாக எரிந்துவிட்டது. பின்னர் உடலை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக பேட்டை இன்ஸ்பெக்டர் ஹரிகரன் வழக்குப்பதிவு செய்து அந்த பெண் யார்? எதற்காக கொல்லப்பட்டார் என விசாரணை நடத்திவருகிறார்.

கொலையாளிகளை பிடிக்க டவுன் உதவி கமிஷனர் விஜயகுமார், இன்ஸ்பெக்டர்கள் ஹரிகரன், ராஜ்சுந்தர் ஆகியோர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரித்து வருகின்றனர்.

கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கு சுமார் 55 வயது இருக்கும். அவரது கழுத்தில் துப்பட்டாவால் இறுக்கப்பட்டு இருந்தது. இதனால் அவரை யாரோ அழைத்து வந்து கொலை செய்து எரித்து இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.

சம்பவம் நடந்த இடத்தையொட்டி உள்ள கடைகளில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி. காமிராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.

மேலும் பழைய பேட்டையில் இருந்து அந்த நேரத்தில் இணைப்பு சாலை வழியாக சென்ற வாகனங்கள், ரொட்டிக்கடை நிறுத்தத்தில் இருந்து சென்ற வாகனங்கள் உள்ளிட்டவற்றையும் கண்டுபிடிக்க அந்த பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட சி.சி.டி.வி. காமிராக்களை பார்த்தனர்.

அதில் சந்தேகப்படும் படியாக 3 ஆட்டோக்கள் வந்துள்ளது. அதில் ஒரு ஆட்டோவில் இருந்து 2 பெண்கள் இறங்கி உள்ளனர். பின்னர் அந்த ஆட்டோ சென்றுவிட்டது.

சிறிது நேரத்திற்கு பிறகு மீண்டும் அதே ஆட்டோ அந்த இடத்திற்கு வந்துள்ளது. அப்போது அதில் ஒரு பெண் மட்டும் ஏறி சென்றுள்ளார்.
 
இதையடுத்து அந்த காட்சிகளை வைத்து அந்த பெண் தான் எரித்து கொல்லப்பட்டாரா? அவரை அழைத்து வந்த பெண் யார்? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அந்த நேரத்தில் வந்த 3 ஆட்டோக்களில் ஒரு ஆட்டோவின் பதிவெண் மட்டுமே காமிராவில் தெளிவாக தெரிந்துள்ளது. அதை வைத்து அந்த ஆட்டோவை கண்டுபிடித்து டிரைவரிடம் தனிப்படையினர் விசாரணை நடத்தி உள்ளனர்.

ஆனால் அந்த சம்பவத்திற்கும், அவருக்கும் தொடர்பு இல்லை என்பது தெரியவந்துள்ளது. இதனால் மேலும் 2 ஆட்டோக்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

அவர்களில் ஒரு ஆட்டோவில் வந்த பெண் தான் கொலை சம்பவத்தில் ஈடுபட்டு இருக்க வேண்டும் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

தொடர்ந்து கொலை செய்யப்பட்ட பெண் குறித்தும், கொலையாளி குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News