லைஃப்ஸ்டைல்
அம்மை நோய்

கோடை காலத்தில் அம்மை நோய் அதிகமாக பரவ காரணமும், தீர்வும்

Published On 2021-04-30 04:30 GMT   |   Update On 2021-04-30 04:30 GMT
அம்மை நோய் காற்றில் எளிதாகப் பரவக்கூடிய நோய். அம்மையால் பாதிக்கப்பட்டவர் பயன்படுத்திய பொருட்களைப் பயன்படுத்துவதன் மூலமும், இருமல், தும்மல் மூலமும் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து வைரஸ் பரவும்
பொதுவாகவே வெப்பத்தை தாங்கக்கூடிய வைரஸ், வெப்பத்தைத் தாங்க இயலாத வைரஸ் என வைரஸ்கள் இருவகைப்படும். வெப்பத்தைத் தாங்க முடியாத வைரஸ்கள் மூலம் சளி, இருமல், காய்ச்சல் போன்ற பிரச்சினைகள் உருவாகும். வெயில் காலத்தில் இந்த பிரச்சினைகளை அதிகம் பார்க்க முடியாது. ஆனால், அம்மை நோயை ஏற்படுத்தும் வைரஸ், வெப்பத்தைத் தாங்கக்கூடிய வைரஸ். சாதாரண பருவ நிலையிலும் பரவக்கூடியது. குறிப்பாக கோடை காலத்தில் அதிகரிக்கக்கூடியது.

அம்மை நோயின் அறிகுறியாக முதலில் காய்ச்சல் வரும். அதைத் தொடர்ந்து பசியின்மை, உடல் பலவீனம் ஏற்படும். சின்னம்மையாக இருந்தால் உடலில் நீர்க்கட்டியைப் போன்ற சிறிய கொப்புளங்கள் தோன்றும். பின்னர் அவை கொஞ்சம் பெரிதாகி நீர்கோத்துக் காணப்படும். நிறம் மாறிக் கொப்புளங்களில் இருந்து நீர் வடியும். பின்னர், நீர் வறண்டு கொப்புளங்கள் உதிரும். கொப்புளம் உள்ள இடங்களில் வடு ஏற்படும். உடலில் அரிப்பு, தாங்க முடியாத வலி, தொடர்ந்து மிதமான காய்ச்சல் போன்ற பிரச்சினைகள் இந்த காலத்தில் இருக்கும். 7 முதல் 10 நாட்களுக்குள் கொப்புளங்கள் உலர்ந்துவிடும்.

அம்மை தாக்கப்பட்டவர்களைத் தனிமைப்படுத்தவும், வைத்தியர்கள் வந்து பார்க்க வசதியாகவும் அந்தக் காலத்தில் அவர்களைக் கோவில்களில் தங்க வைப்பார்கள். அதை பலர் இப்போதும் பின்பற்றுகிறார்கள். அம்மை நோயைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. உடல் வெப்பம் அதிகமாகி நுரையீரல் காய்ச்சல் (நிமோனியா), நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு மூளை காய்ச்சல், வயிற்றுப்போக்கு போன்ற மற்றப் பிரச்சினைகளையும் ஏற்படுத்தி விடலாம்.

எனவே, அம்மை நோயால் பாதிக்கப்பட்டவரை வேப்பிலையில் படுக்க வைப்பது, வேப்பிலை அரைத்துப் போட்டுக்கொள்வதுடன் விட்டுவிடக்கூடாது. அம்மை நோய் வந்தால் அதைக் குணப்படுத்த மருந்து இல்லை. அதேநேரம் அதன் வீரியத்தை மட்டுப்படுத்தவும், அம்மை நோயால் வரக்கூடிய மற்ற நோய்களைத் தடுக்கவும் மாத்திரைகள் இருக்கின்றன. வலி, எரிச்சல் ஆகியவற்றைத் தடுக்கவும் மருந்துகள் உண்டு. எனவே மருத்துவர் பரிந்துரையின்பேரில் வாங்கி உட்கொள்ளலாம்.

ஒருமுறை அம்மை நோய் வந்துவிட்டுப் போனால், பிறகு வாழ்நாள் முழுவதும் வராது என்று நம்புகிறோம். அது உண்மைதான், அம்மை நோய் அந்த அளவுக்கு நோய் எதிர்ப்புத் தன்மையை ஏற்படுத்திவிடும். அதேநேரம், நோய் எதிர்ப்புத் தன்மை குறைவாக இருப்போர், எச்..ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்கள், காசநோய் உள்ளவர்கள் ஆகியோருக்கு, ஏற்கெனவே அம்மை நோய் வந்திருந்தாலும்கூட மீண்டும் வருவதற்கான சாத்தியம் அதிகம். இதேபோல குழந்தைகள், முதியவர்களுக்கு நோய் எதிர்ப்புத் தன்மை குறைவாக இருக்கும் என்பதால், அவர்களுக்கும் மீண்டும் வரலாம். கர்ப்பிணிகளை அம்மை நோய் தாக்கினால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மருத்துவர் ஆலோசனைப்படி மருந்துகள் உட்கொள்ள வேண்டும்.

அம்மை நோய் காற்றில் எளிதாகப் பரவக்கூடிய நோய். அம்மையால் பாதிக்கப்பட்டவர் பயன்படுத்திய பொருட்களைப் பயன்படுத்துவதன் மூலமும், இருமல், தும்மல் மூலமும் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து வைரஸ் பரவும். குறிப்பாக ஒருவர் அம்மை நோயால் முழுமையாகத் தாக்கப்படுவதற்கு முந்தைய முதல் மூன்று நாட்களும், வந்து சென்ற பின் இரண்டு நாட்களும்தான் அம்மை நோய் வேகமாகப் பரவும். எனவே, அம்மை நோயால் பாதிக்கப்பட்டவரை அப்போது தனிமைப்படுத்தி வைக்க வேண்டும்.
Tags:    

Similar News