செய்திகள்
கொரோனா வைரஸ்

ஈரோட்டில் மேலும் 457 பேருக்கு கொரோனா தொற்று

Published On 2021-04-29 09:47 GMT   |   Update On 2021-04-29 09:47 GMT
ஈரோடு மாவட்டம் முழுவதும் 2,799 பேர் கொரோனாவுக்காக பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா முதல் அலையை விட 2-வது அலை மிக வேகமாக பரவி வருகிறது. தற்போது தொற்று வேகமாக பரவி வருவதால் பரிசோதனையை எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டு தற்போது தினமும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல் படி மேலும் 457 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 20 ஆயிரத்து 253 ஆக உயர்ந்துள்ளது. பாதிப்பை போல குணமடைந்தவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது சற்று நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.

ஒரே நாளில் 297 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் மாவட்டத்தில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 17,295 ஆக உயர்ந்துள்ளது. ஈரோடு தனியார் ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 72 வயது முதியவர், பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 80 வயது மூதாட்டி என இருவர் உயிரிழந்துள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 159 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது மாவட்டம் முழுவதும் 2,799 பேர் கொரோனாவுக்காக பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொடுமுடி வடக்கு வீதியை சேர்ந்த மூன்று ஆண்கள், ஒரு பெண் உள்பட 4 பேருக்கும், பாசூரை சேர்ந்த 65 வயது மூதாட்டி ஒருவர், 51வயது ஆண் என மொத்தம் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். கொடுமுடி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அந்த பகுதி முழுவதும் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சென்னிமலை சுற்று வட்டாரத்தில் கடந்த 2 வாரங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. சென்னிமலை பகுதியான மேலப்பாளையம், பெருமாள் கோவில் வீதி, உப்பிலிபாளையம், கிழக்கு புது வீதி, திருஞானசம்பந்தர் தெரு, பிடாரியூர், மணிமலை உள்ளிட்ட பகுதிகளில் 15 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு அவர்கள் சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னிமலை வட்டார மருத்துவ அதிகாரி சதீஷ் குமார் தலைமையில் சென்னிமலை டவுன் பகுதி, காசிபாளையம், வெள்ளோடு ஆகிய பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள டாக்டர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் ஆகியோர் மக்கள் வசிக்கும் பகுதியில் தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தி உள்ளனர். கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

பெருந்துறை குன்னத்தூர் ரோடு முதலியார் வீதி பகுதியில் ஒரே வீட்டில் சேர்ந்த 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் வீடுகளிலேயே தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். இதனையடுத்து அந்த பகுதி முழுவதும் கண்காணிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த பணியை பெருந்துறை பேரூராட்சி செயல் அலுவலர் ரவிக்குமார் பார்வையிட்டார். இதையடுத்து அந்த பகுதியில் உள்ள 5 கடைகளை அடைக்க உத்தரவிட்டார்.

Tags:    

Similar News