செய்திகள்
அரசு சின்னங்கள்

அரசு சின்னங்களை தவறாக பயன்படுத்தினால் ரூ.5 லட்சம் வரை அபராதம்- மக்கள் கருத்து தெரிவிக்கலாம்

Published On 2019-11-29 10:36 GMT   |   Update On 2019-11-29 12:24 GMT
அரசு சின்னங்களை தவறாக பயன்படுத்துபவர்களுக்கு ஜெயில் தண்டனை மற்றும் ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்கும் பரிந்துரை தொடர்பாக பொதுமக்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்.

புதுடெல்லி:

தேசிய கொடி, அரசு துறைகள் பயன்படுத்தும் மரபு சின்னங்கள் அடங்கிய மேலங்கி, ஜனாதிபதி அல்லது கவர்னர் அலுவலக முத்திரை, மகாத்மா காந்தி, பிரதமர் மற்றும் அசோக சக்கரத்தின் படங்களை பயன்படுத்த கட்டுப்பாடுகள் உள்ளன. அதற்கான சட்டம் 1950-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்டது.

அரசு சின்னங்கள் மற்றும் தலைவர்களின் படங்களை தவறாக சட்ட விரோதமாக பயன்படுத்துபவர்களுக்கு ரூ.500 முதல் ஒரு லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

இதில் மாற்றம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி அரசு சின்னங்கள் மற்றும் தலைவர்களின் படங்களை தொடர்ந்து தவறாக பயன்படுத்துபவர்களுக்கு ஜெயில் தண்டனையும் ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த தவறை தொடர்ந்து செய்தால் ரூ.5 லட்சம் அபராதமும் விதிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

 


இதை நுகர்வோர் அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. இது பற்றிய கருத்துக்களை நுகர்வோர் துறை அமைச்சகத்தின் இணைய தளத்தில் வருகிற டிசம்பர் 20-ந்தேதி வரை பொதுமக்கள் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த சட்டம் தீவிரமாக அமல்படுத்தபடாமல் உள்ளது. அரசு சின்னங்கள் மற்றும் தலைவர்கள் படங்களை தவறாக பயன்படுத்துபவர்கள் எந்தவித தண்டனையும் பெறாமல் ரூ.500 மட்டும் அபராதம் செலுத்திவிட்டு தப்பித்து வருகின்றனர்.

அதை தடுக்கவே தற்போது இச்சட்டம் கடுமையாக்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் இதுகுறித்து 1767 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவை நிலுவையில் உள்ளன என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News