உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

காகிதம் விலையை கட்டுப்படுத்த அட்டைப்பெட்டி உற்பத்தியாளர்கள் வேண்டுகோள்

Published On 2022-01-11 07:23 GMT   |   Update On 2022-01-11 07:23 GMT
கொரோனாவுக்கு பின் காகிதம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தற்போது டன்னுக்கு ரூ.2 ஆயிரம் கிராப்ட் காகிதம் விலையை காகித ஆலைகள் உயர்த்தியுள்ளன.
திருப்பூர்:

கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், நீலகிரி மாவட்டங்களில் அட்டைப் பெட்டி உற்பத்தி நிறுவனங்கள் அதிகளவில் இயங்குகின்றன. ஆயத்த ஆடை, ஆட்டோமொபைல், உணவு பொருட்கள் உட்பட அனைத்துவகை பொருட்கள் பேக்கிங்கிற்கான அட்டைப்பெட்டி ரகங்கள் தயாரிக்கப்படுகிறது.

சத்தியமங்கலம், உடுமலை, சென்னை, ஒசூர் ஆலைகளிடம் இருந்து அட்டைப்பெட்டி நிறுவனங்கள் பிரதான மூலப்பொருளான கிராப்ட் காகிதம் கொள்முதல் செய்கின்றன.

கொரோனாவுக்கு பின் காகிதம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தற்போது டன்னுக்கு ரூ.2 ஆயிரம் கிராப்ட் காகிதம் விலையை காகித ஆலைகள் உயர்த்தியுள்ளன. 

இதுகுறித்து தென்னிந்திய அட்டைப்பெட்டி உற்பத்தியாளர் சங்க துணை தலைவர் சிவக்குமார் கூறியதாவது:

பல்வேறு காரணங்களை கூறி காகித ஆலைகள், கிராப்ட் காகிதம் விலையை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. எவ்வித முன்னறிவிப்புமின்றி டன்னுக்கு ரூ.2 ஆயிரம் காகிதம் விலையை உயர்த்தி அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.

வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் கழிவு காகிதம் விலை உயர்வு, கப்பல் கன்டெய்னர் கட்டணம் அதிகரிப்பு, கெமிக்கல்கள் விலை உயர்வால் காகிதம் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக ஆலை உரிமையாளர்கள் கடிதம் அனுப்பியுள்ளனர்.

காகிதம் விலை உயர்வால் அட்டைப்பெட்டி உற்பத்தி செலவினம் அதிகரித்துள்ளது. மூலப்பொருள் விலை உயர்வுக்கு ஏற்ப அட்டைபெட்டி விலையை தொடர்ந்து உயர்த்த முடிவதில்லை. வழக்கமாக 15 முதல் 20 நாட்கள் கடனுக்கு காகிதம் வழங்குவர். 

தற்போது ரொக்க தொகை வழங்கினால் மட்டுமே காகிதம் கிடைக்கிறது. அதுவும் புக்கிங் செய்து ஒரு வாரம் முதல் 10 நாட்கள் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. நூல் விலை கூட மாதம் ஒருமுறையே உயர்த்தப்படுகிறது. காகிதம் விலை திடீர் திடீரென உயர்த்தப்படுகிறது.

காகிதம் தட்டுப்பாடு, விலை உயர்வால் அட்டைப்பெட்டி துறையினர், செய்வதறியாது தவிக்கிறோம். ஆடை உற்பத்தி நிறுவனங்கள், அட்டைப்பெட்டிக்கான தொகைகளை உடனடியாக வழங்கி கைகொடுக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் காகிதம் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 
Tags:    

Similar News