ஆன்மிகம்
திருவிழாவில் அம்மன் சிம்ம வாகனத்தில் துர்க்கை திருக்கோலத்தில் எழுந்தருளிய காட்சி.

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா: இன்று அதிகாலையிலேயே பக்தர்கள் கூட்டம் அலைமோதல்

Published On 2021-10-07 06:15 GMT   |   Update On 2021-10-07 06:15 GMT
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் குலசேகரன்பட்டினம் கோவிலுக்கு மாலை அணிந்து வருவார்கள்.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் பிரசித்திபெற்ற முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இரவு 9 மணிக்கு சிம்ம வாகனத்தில் துர்க்கை திருக்கோலத்தில் அம்மன் திருவீதி உலா கோவில் உள்பிரகார மண்டபத்தை மட்டும் சுற்றி வந்தன.

திருக்கோலத்தில் அம்மனை தரிசித்தால் ராகு, கேது, தோ‌ஷம் நீங்கி கன்னிப் பெண்களுக்கு திருமணம் நடைபெறும் என்பது பக்தர்களின் நம்பிகை ஆகும். ஆனால் கொரோனா தொற்று காரணமாக பக்தர்களுக்கு நேற்று அனுமதி வழங்கப்படவில்லை.

2-ம் நாளான இன்று காலை 6 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. இன்று பக்தர்களுக்கு அனுமதி என்பதால் ஏராளமான பக்தர்கள் நடைதிறப்புக்கு முன்பே அதிகாலையிலேயே கோவிலுக்கு வர தொடங்கினர்.

அவர்கள் கடற்கரையில் கடல் நீர் எடுத்து, கோவிலுக்கு வந்துசாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து இரவு 8 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.

இரவு 9 மணிக்கு அம்மன் கற்பக விருட்ச வாகனத்தில் விசுவகர்மசுவரர் திருக்கோலத்தில் எழுந்தருளி பவனி வந்து காட்சி அளிக்கிறார்.கடந்த ஆண்டு கொரோனா பரவல் தீவிரமாக இருந்ததாலும், கடும் கட்டுப்பாடுகள் காரணமாகவும் வழக்கத்தைவிட குறைந்த அளவே பக்தர்கள் மாலை அணிந்தனர்.



இந்த ஆண்டு தொற்று பரவல் மிகவும் குறைந்து கட்டுக்குள் இருப்பதாலும், கட்டுப்பாடுகள் தளர்வு காரணமாகவும் ஏராளமானவர்கள் விரதம் தொடங்கி உள்ளனர். திருமண தடை, குழந்தை பாக்கியம் உள்ளிட்ட பல்வேறு வேண்டுதல்கள் நிறைவேற வேண்டி பக்தர்கள் 11, 21, 31, 41 நாட்கள் கடும் விரதம் மேற்கொண்டு மாலை அணிந்துள்ளனர்.

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் குலசேகரன்பட்டினம் கோவிலுக்கு மாலை அணிந்து வருவார்கள். மேலும் வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருவது குலசையின் சிறப்பாகும்.

வழக்கமாக கோவிலில் கொடியேற்றப்பட்டதும் பக்தர்களுக்கு பூசாரி கையினால் காப்பு என்ற மஞ்சள் கயிறு வழங்கப்படும். இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக அவர்களுக்கு அந்தந்த ஊர்களிலேயே காப்புகள் அணிந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.எனினும் தசரா குழுக்களுக்கு கோவிலில் காப்புகள் இன்று முதல் வழங்கப்படுகிறது.

குழுவை சேர்ந்தவர்கள் மற்றவர்களுக்கு காப்புகளை வாங்கி செல்லலாம். இதற்காக 5, 10, 50, 100 என தனித்தனியே கவர்களில் லட்சக்கணக்கான காப்புகள் தயார் நிலையில் உள்ளது. இன்று ஏராளமான தசரா குழுவை சேர்ந்தவர்கள் காப்புகளை வாங்கிச் சென்றனர்.

Tags:    

Similar News