செய்திகள்
வேலூர் மாவட்டத்தில் வாக்குப்பதிவு எந்திரம்

வேலூர் மாவட்டத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்க ரூ.5¾ கோடியில் குடோன் - கலெக்டர் திறந்து வைத்தார்

Published On 2020-12-05 18:28 GMT   |   Update On 2020-12-05 18:28 GMT
வேலூர் மாவட்டத்தில் ரூ.5 கோடியே 77 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் கலெக்டர் சண்முகசுந்தரம் ரிப்பன் வெட்டி குடோனை திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றினார்.
வேலூர்:

தமிழகம் முழுவதும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்க குடோன் கட்ட இந்திய தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியது. அதன்படி வேலூர் மாவட்டத்தில் ரூ.5 கோடியே 77 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் கலெக்டர் அலுவலகத்தின் பின்புறம் குடோன் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்கான பணி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கி முடிவடைந்தது. இந்த நிலையில் நேற்று அந்த குடோன் திறப்பு விழா நடந்தது.

கலெக்டர் சண்முகசுந்தரம் ரிப்பன் வெட்டி குடோனை திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் முதன்முறையாக ஓட்டுப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைப்பதற்கான நவீன முறையில் குடோன் கட்டப்பட்டுள்ளது. இதில் 9,320 ஓட்டுப்பதிவு எந்திரங்கள், 5,040 கட்டுப்பாட்டு கருவிகள், 4,924 யாருக்கு வாக்கு செலுத்தினோம் என்பதை கண்டறியும் கருவிகளை பாதுகாப்பாக வைக்கலாம். குடோன் முழுவதும் 16 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. தீ விபத்து மற்றும் ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் தானியங்கி அலாரம் ஒலிக்கும் வசதியும், லிப்ட் வசதியும் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சங்கரலிங்கம், உதவி கலெக்டர் கணேஷ், உதவி செயற்பொறியாளர்கள் திரிபுரசுந்தரி, சரவணன், தேர்தல் பிரிவு தாசில்தார் ஸ்ரீராம், வேலூர் தாசில்தார் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News