உள்ளூர் செய்திகள்
மழை

கடலூர், நெல்லிக்குப்பம் பகுதியில் சூறாவளி காற்றுடன் மழை

Published On 2022-05-07 10:53 GMT   |   Update On 2022-05-07 10:53 GMT
கடலூர், நெல்லிக்குப்பம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் மின் பாதிப்புகள் தொடர்பாக ஊழியர்கள் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு வருகின்றனர்.
கடலூர்:

தென்மேற்கு வங்க கடல் அதனை ஒட்டிய வட இலங்கை கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதால் தமிழகத்தின் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் கோடை வெயில் மற்றும் அக்னி நட்சத்திரம் தொடங்கி உள்ள நிலையில் சுட்டெரிக்கும் வெயில் அடித்து வருவதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். மேலும் சில நாட்களுக்கு முன்பு 100 டிகிரிக்கு மேல் கடலூர் மாவட்டத்தில் வெயிலின் அளவு பதிவானது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு கடலூர், நெல்லிக்குப்பம், நடுவீரப்பட்டு, பாலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் லேசான காற்றுடன் தொடங்கி சூறாவளி காற்றாக மாறிய நிலையில் மழை பெய்து வந்தது.

அப்போது கடலூர் மற்றும் நெல்லிக்குப்பம் சுற்றுவட்டார பகுதியில் சூறாவளி காற்று பலமாக வீசியதால் நள்ளிரவு 12.30 மணிக்கு மேல் மின்தடை ஏற்பட்டு கடலூர் மற்றும் நெல்லிக்குப்பம் பகுதி இருளில் மூழ்கியது. இதனை தொடர்ந்து மின்சார துறை சார்பில் மின் பணியாளர்கள் உடனடியாக மின்தடை ஏற்பட்டதைத் தொடர்ந்து ஆய்வு செய்தனர்.

அப்போது பல இடங்களில் மின் ஒயர்கள் அறுந்தும், இன்குபேட்டர் சேதமடைந்ததால் ஆங்காங்கே மின்தடை ஏற்பட்டது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து மின்சாரத் துறை ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டு கடலூர் மற்றும் நெல்லிக்குப்பம் உள்ளிட்ட பல்வேறு நகர பகுதிகளில் முதற்கட்டமாக அரைமணி நேரம் முதல் ஒரு மணி நேரத்திற்குள் மின் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

ஆனால் கடலூர், நெல்லிக்குப்பம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராம பகுதியில் அதிகாலை 4 மணிக்கு மேல் ஒவ்வொரு பகுதியாக மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது. இதன் காரணமாக கடலூர் மற்றும் நெல்லிக்குப்பம் பகுதி மக்கள் மின்தடை காரணமாக கடும் அவதி அடைந்து வந்தனர்.

சூறாவளி காற்று மற்றும் மழை பெய்த காரணத்தினால் வழக்கத்தைவிட வெயிலின் தாக்கத்தால் ஏற்பட்ட புழுக்கம் குறைந்து குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் சற்று மகிழ்ச்சி அடைந்ததை காண முடிந்தது. மேலும் கடலூர் நெல்லிக்குப்பம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் மின் பாதிப்புகள் தொடர்பாக ஊழியர்கள் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News