செய்திகள்
திற்பரப்பு அருவி

குமரியில் பலத்த மழை- திற்பரப்பில் 17.6 மி.மீ. பதிவு

Published On 2021-07-16 07:03 GMT   |   Update On 2021-07-16 07:03 GMT
பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதிகளிலும் மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் மழை கொட்டி தீர்த்தது. இதனால் அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்துள்ளது.
நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் சாரல் மழை பெய்து வந்த நிலையில் இன்று காலை கனமழை கொட்டி தீர்த்தது.

நாகர்கோவிலில் இன்று காலை 6 மணிக்கு மழை பெய்யத் தொடங்கியது. முதலில் லேசாக தூறிய மழை நேரம் செல்ல செல்ல வெளுத்து வாங்கியது. சுமார் 1 மணி நேரமாக கொட்டிய கனமழையினால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

பின்னர் விட்டு விட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் இரு சக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளானார்கள். கோட்டார் சாலையில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளங்களில் மழை நீர் தேங்கி நின்றது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கொட்டாரம், மயிலாடி, சுசீந்திரம், சாமித்தோப்பு, ஆரல்வாய்மொழி மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. திற்பரப்பு அருவி பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

அருவியில் குளிப்பதற்கு தடை நீடித்து வருவதால் திற்பரப்பு அருவி வெறிச்சோடி காணப்படுகிறது. குழித்துறை, மார்த்தாண்டம், திருவட்டார், முள்ளாங்கினாவிளை பகுதிகளில் மழை பெய்தது. திற்பரப்பில் அதிகபட்சமாக 17.6 மி.மீ. மழை பதிவானது.

பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதிகளிலும் மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் மழை கொட்டி தீர்த்தது. இதனால் அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்துள்ளது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 44.97 அடியாக உள்ளது. அணைக்கு 786 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 506 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 74.05 அடியாக உள்ளது. அணைக்கு 172 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 400 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

குழித்துறை ஆறு, கோதையாறு, வள்ளியாறு, பரளியாறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கீரிப்பாறை, குலசேகரம், தடிக்காரன்கோணம் பகுதியில் உள்ள ரப்பர் தோட்டங்களில் உள்ள சிரட்டைகளில் மழை நீர் தேங்கி உள்ளதால் ரப்பர் பால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

தோவாளை, செண்பக ராமன்புதூர் பகுதிகளில் செங்கல் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளதால் தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News