செய்திகள்
பிரதமர் மோடி

உத்தரமேரூர் குடவோலை முறையை சுட்டிக்காட்டி பேசிய பிரதமர் மோடி

Published On 2020-12-10 23:46 GMT   |   Update On 2020-12-10 23:46 GMT
புதிய பாராளுமன்ற அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய பிரதமர் மோடி, சென்னை அடுத்த உத்தரமேரூர் குடவோலை முறையை நினைவுபடுத்தினார்.
புதுடெல்லி:

தலைநகர் டெல்லியில் 971 கோடி ரூபாய் செலவில் புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

நாட்டின் 75-வது சுதந்திர தினம் 2022-ம் ஆண்டில் கொண்டாடப்படுவதற்கு முன்பு புதிய பாராளுமன்ற கட்டிடத்தை எழுப்புவதற்கான பணியில் மத்திய அரசு மும்முரமாக ஈடுபட்டுள்ளது.

தரை தளம், தரைக்கு கீழே ஒரு தளம், முதல் தளம், இரண்டாம் தளம் என மொத்தம் 4 தளங்களுடன் புதிய பாராளுமன்றம் கட்டப்படுகிறது. இதில் மக்களவை உறுப்பினர்கள் 888 பேர் மற்றும் மேல்சபை உறுப்பினர்கள் 384 பேர் இருக்கும் வகையில் இருக்கைகள் அமைக்கப்படுகிறது. நிலநடுக்கத்தால் பாதிக்காத வகையில் இந்த கட்டிடம்  கட்டப்படுகிறது.

புதிய பாராளுமன்ற கட்டிடத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று அடிக்கல் நாட்டி பூமிபூஜையை தொடங்கி வைத்தார். இதில் மத்திய மந்திரிகள், பல்வேறு மாநில முதல் மந்திரிகள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பல்வேறு நாடுகளின் தூதுவர்கள் பங்கேற்றனர்.

அப்போது பேசிய பிரதமர் மோடி, சென்னை அடுத்த உத்தரமேரூர் குடவோலை முறையை நினைவுபடுத்தினார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடி கூறுகையில், சென்னை அருகே 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள உத்தரமேரூரில் வரலாற்று சான்று கிடைத்துள்ளது. அங்கு பஞ்சாயத்து தேர்தல் நடந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுப்பு பற்றியும் உத்தரமேரூர் கல்வெட்டில் உள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அங்கு மகா சபை நடந்துள்ளது. மக்கள் சபை நடந்தது பற்றி கல்வெட்டில் விரிவாக கூறப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
Tags:    

Similar News