செய்திகள்
கோப்புபடம்

கோவையில் நண்பரின் கண்முன்பு வாலிபர் கொடூர கொலை - வழிப்பறி கொள்ளையர்கள் வெறிச்செயல்

Published On 2020-11-27 07:10 GMT   |   Update On 2020-11-27 07:10 GMT
கோவை அருகே நண்பரின் கண்முன்பு வாலிபர் வழிப்பறி கொள்ளையர்களால் கொலை செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை:

கோவை விமான நிலையம் அருகே உள்ள பூங்கா நகரை சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மகன் விக்னேஷ் (வயது 25). இவர் காளப்பட்டியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் விக்னேஷ் தனது நண்பரான வால்பாறையை சேர்ந்த சுஜித் (30) என்பவரை தனது மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர வைத்துக்கொண்டு பிருந்தாவன் நகரில் உள்ள மற்றொரு நண்பரின் அறைக்கு சென்று கொண்டு இருந்தார்.

மோட்டார் சைக்கிளில் பிருந்தாவன் நகர் அருகே சென்ற போது அங்கு நின்று கொண்டு இருந்த 4 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தினர். அவர் விக்னேஷ், சுஜித் ஆகியோரை கத்தியை காட்டி மது குடிக்க பணம் கொடுக்குமாறு மிரட்டினர். அப்போது சுஜித் தன்னிடம் பணம் இல்லை என்று கூறி தான் வைத்து இருந்த செல்போனை கொடுத்தார். அதனை அந்த வாலிபர்கள் பறித்துக்கொண்டனர்.

ஆனால் விக்னேஷ் பணத்தை கொடுக்க மறுத்து விட்டார் . அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அந்த வாலிபர்கள் தாங்கள் வைத்து இருந்த கத்தியை எடுத்து விக்னேசின் கழுத்தில் குத்தினர். பின்னர் அவர் வைத்து இருந்த செல்போனை பறித்துக்கொண்டு அங்கு இருந்து தப்பிச் சென்றனர்.

கத்தி குத்து காயங்களுடன் கீழே விழுந்த விக்னேஷ் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சுஜித் அலறல் சத்தம் போட்டார்.

இதனை கேட்ட அக்கம் பக்கத்தினர் வீடுகளில் இருந்து வெளியே வந்து பார்த்தனர். அங்கு ரத்த வெள்ளத்தில் வாலிபர் உயிருக்கு போராடுவதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர் விக்னேசை மீட்டு சிகிச்சைக்காக அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு விக்னேசை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து பீளமேடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக போலீசார் தனியார் ஆஸ்பத்திரி மற்றும் கொலை நடந்த பிருந்தாவன் நகர் பகுதிக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் அந்த பகுதிகளில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு காமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது 4 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பிச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

இது குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபரை குத்தி கொன்று செல்போனை பறித்து சென்ற 4 வாலிபர்களை வலை வீசி தேடி வருகிறார்கள்.

மாநகர போலீஸ் கமி‌ஷனர் சுமித்சரண் உத்தரவின் பேரில் தலைமறைவாக உள்ள 4 வாலிபர்களை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வாலிபர்களை தேடி வருகிறார்கள்.

நள்ளிரவில் நடந்த இந்த சம்பவம் விமான நிலையம் அருகே உள்ள பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News