செய்திகள்

8 வழி பசுமை சாலைக்கு நிலம் கையகப்படுத்தியதால் விவசாயி தற்கொலை

Published On 2018-07-30 04:49 GMT   |   Update On 2018-07-30 04:49 GMT
8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்தியதால் மனமுடைந்த விவசாயி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். #GreenWayRoad #Farmersuicide

செங்கம்:

ரூ.10 ஆயிரம் கோடியில் சென்னை-சேலம் இடையே 8 வழி பசுமை விரைவுச்சாலை அமைக்கப்படுகிறது. இந்த சாலை திட்டத்திற்காக காஞ்சீபுரம், திருவண்ணாமலை தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய 5 மாவட்டங்களில் விவசாய நிலங்கள், பாசன கிணறுகள், வனப்பகுதிகள், மலைகள் அழிக்கப்படுகிறது. பசுமையை அழித்து பசுமை சாலையா? என விவசாயிகள் கொதிப்படைந்துள்ளனர்.

5 மாவட்டங்களிலும் நிலம் கையகப்படுத்துவதற்கான அளவீடு பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு குறியீடு கற்கள் நடப்பட்டன. சோறு போடும் நிலத்தை கொடுக்க விரும்பாமல் விவசாயிகள் போராட்டத்தில் குதித்தனர். போலீஸ் அடக்குமுறையால் விவசாயிகளின் போராட்டம் கட்டுப்படுத்தப்பட்டது. பல இடங்களில் விவசாயிகள் பலர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், பசுமை சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


செங்கம் அடுத்த மேல் வணக்கம்பாடி காந்தி நகரை சேர்ந்தவர் சேகர் (வயது 55). விவசாயி. இவருக்கு சின்ன பாப்பா என்ற மனைவி, ஆனந்த், அன்பழகன் என்ற 2 மகன்கள், சங்கீதா என்ற ஒரு மகள் இருக்கிறார்கள். சேகருக்கு வீடு, பாசன கிணற்றுடன் 3 ஏக்கர் நிலம் உள்ளது.

பசுமை வழி சாலைக்கு சேகரின் விவசாய நிலமும் கையகப்படுத்தப்பட்டுள்ளது. நிலம் பறிபோனதால் அவர் மனமுடைந்தார். என் உயிரே போனாலும் விளை நிலத்தை விட்டு தரமாட்டேன் என்று குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் சொல்லி வேதனைப்பட்டார். நேற்று மாலை திடீரென வி‌ஷம் குடித்து சேகர் தற்கொலை செய்து கொண்டார்.

மேல்செங்கம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் திருவண்ணாமலை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #GreenWayRoad #Farmersuicide

Tags:    

Similar News