செய்திகள்
தற்கொலை

ஒடிசாவிலும் சோகம் : ‘நீட்’ அச்சத்தால் மாணவி தற்கொலை

Published On 2020-09-14 02:01 GMT   |   Update On 2020-09-14 02:01 GMT
தமிழகத்தில் 3 மாணவர்கள் நீட் தேர்வு குறித்த அச்சத்தால் தற்கொலை செய்து கொண்ட நிலையில், ஒடிசாவிலும் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட தகவல் வெளியாகி உள்ளது.
பரிபடா:

மருத்துவ படிப்புகளுக்கான ‘நீட்’ நுழைவுத்தேர்வு நேற்று நாடு முழுவதும் நடந்தது. இந்த தேர்வு குறித்த அச்சத்தால் தமிழகத்தில் 3 மாணவர்கள் நேற்று முன்தினம் தற்கொலை செய்து கொண்டனர். இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதைப்போல ஒடிசாவிலும் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட தகவல் வெளியாகி உள்ளது.

அங்குள்ள மயூர்பஞ்ச் மாவட்டத்துக்கு உட்பட்ட பரிபடா பகுதியை சேர்ந்தவர் உபசனா சாகு (வயது 18). இவர் நீட் தேர்வுக்காக தீவிரமாக தயாராகி வந்தார். ராஜஸ்தானில் உள்ள ஒரு பயிற்சி மையத்தில் பயின்று வந்த அவர், கடந்த மே மாதம்தான் சொந்த ஊர் வந்திருந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு திடீரென வீட்டிலேயே தூக்குப்போட்டுக்கொண்டார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர், உபசனாவை மீட்டு உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து பரிபடா நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அப்போது மாணவி உபசனா எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று கிடைத்தது. அதில், ‘நீட்’ தேர்வில் தோல்வி அடைந்து விடுவோமோ என்ற அச்சத்தால் தொடர்ந்து மன அழுத்தத்தில் இருந்ததாக அவர் குறிப்பிட்டு இருந்தார்.

நீட் தேர்வு அச்சத்தால் நாட்டின் பல பகுதிகளில் மாணவ-மாணவிகள் தற்கொலை செய்து கொள்ளும் விவகாரம் நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News