செய்திகள்
மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பங்கேற்ற காட்சி

2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் குறித்து இறுதி முடிவு எடுக்க கமல்ஹாசனுக்கு அதிகாரம்

Published On 2020-10-17 02:45 GMT   |   Update On 2020-10-17 03:51 GMT
2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் குறித்து இறுதி முடிவு எடுக்கும் பொறுப்பு கமல்ஹாசனுக்கு வழங்கி மக்கள் நீதி மய்ய நிர்வாக குழு, செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னை:

மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம், சென்னை தியாகராயநகரில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் துணைத் தலைவர் டாக்டர் ஆர்.மகேந்திரன், பொருளாளர் சந்திரசேகர், புதுச்சேரி மாநில துணைத் தலைவர் தங்கவேலு, பொதுச்செயலாளர்கள் அருணாசலம், சி.கே.குமரவேல், முருகானந்தம், மாநில செயலாளர்கள் கமீலா நாசர், சினேகன் உள்பட நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:-

* கொரோனா பெருந்தொற்றால் வேலையிழந்து ஏழ்மையில் வாடிக்கொண்டிருக்கும் மக்களுக்கு உதவுவதற்காக தலைவர் அறிமுகப்படுத்திய முன்னோடி திட்டமான “நாமே தீர்வு” திட்டம் தொடர்ந்து பொதுப் பிரச்சினைகளில் மக்கள் நலன்காக்க மேலதிக ஆற்றலுடன் களத்தில் நிற்க வேண்டும்.

* வரவிருக்கும் 2021-ம் ஆண்டு தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் மகத்தான வெற்றி ஈற்றிடும் வகையில் தேர்தல் களம் காண, மக்கள் விருப்பத்தின் அடிப்படையில், தனித்துப் போட்டியிடுவதோ அல்லது ஒத்தகொள்கை கொண்ட கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது குறித்தோ, போட்டியிடும் தொகுதிகள் குறித்தோ, வேட்பாளர்கள் குறித்தோ இறுதி முடிவெடுக்கும் பொறுப்பு தலைவர் கமல்ஹாசனை சார்ந்தது என இக்கூட்டத்தில் ஒருமனதாகத் தீர்மானிக்கப்பட்டது.

* 2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பாகப் போட்டியிடும் மக்கள் நன்மதிப்பைப் பெற்ற வேட்பாளர்களை இனம்காண “வேட்பாளர் தேர்வுக்குழு” தலைவர் கமல்ஹாசனால் நியமிக்கப்படும் என்றும், அக்குழு பரிந்துரை செய்யும் தகுதியான நபர்களில் இருந்து கட்சியின் சார்பாகப் போட்டியிடும் இறுதி வேட்பாளர்களை தலைவர் தேர்ந்தெடுத்து அறிவிப்பார்கள் என இக்கூட்டத்தில் ஒருமனதாகத் தீர்மானிக்கப்பட்டது.

* 2021 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தங்கள் மக்கள் நல கொள்கைகளையும் தலைவரின் உயரிய சிந்தனைகளையும் மக்களிடம் கொண்டு சேர்க்கவும், தேர்தல் பணிகளை துல்லியமாக ஆற்றிடவும் 7 குழுக்களை அமைக்கவும், மேலும் இதுபோன்ற சிறப்பு குழுக்கள் அமைக்கவும் அதன் உறுப்பினர்களை நியமிக்கவும் மற்றும் இக்குழுக்களின் பணிகளை ஒருங்கிணைக்க மேற்பார்வை குழுவை அமைக்க தலைவருக்கு முழு பொறுப்பு வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

* இந்திய தேர்தல் ஆணையம் கன்னியாகுமரி நாடாளுமன்றம் இடைத்தேர்தலினை தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தலோடு சேர்த்து நடத்தும் பட்சத்தில் மக்கள் நீதி மய்யம் உறுதியாக அத்தேர்தலில் போட்டியிட வேண்டும் என ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது.

* கிராம சபை கூட்டங்களை தொடர்ந்து ரத்து செய்து, உள்ளாட்சி உரிமைகளை முடக்கி ஜனநாயகத்தையும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையும் கேலிக்கூத்தாக்கும் ஆளும் கட்சியின் சர்வாதிகாரப் போக்கினை மக்கள் நீதி மய்யம் வன்மையாகக் கண்டிக்கிறது.

* உள்ளாட்சி உரிமைகளை மீட்டெடுக்கும் முயற்சியாக, தமிழக அரசால் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டு வரும் கிராம சபை கூட்டத்தை விரைந்து நடத்திட வலியுறுத்தி ஐகோர்ட்டில் மக்கள் நீதி மய்யம் சார்பாக வழக்கு தொடுக்கவைத்து, மக்களின் உரிமைக்கு என்றும் துணை நிற்கும் தலைவர் கமல்ஹாசனுக்கு கட்சியின் சார்பாக பாராட்டுக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறது.

* மக்கள் நீதி மய்யத்தின் தலைமைத் தேர்தல் அலுவலகம் இறுதி செய்கிற தேர்தல் பிரசார வியூகத்தையும், அணுகுமுறைகளையும் செயல்படுத்த வேண்டிய கடமை கட்சியின் அனைத்து உறுப்பினர்களுக்கும் உண்டு.

மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 
Tags:    

Similar News