செய்திகள்
வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரையாக பக்தர்கள்

வேளாங்கண்ணி பேராலய திருவிழா நாளை தொடக்கம்: பாதுகாப்பு பணியில் 1,800 போலீசார்

Published On 2019-08-28 05:49 GMT   |   Update On 2019-08-28 05:49 GMT
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பேராலய திருவிழா நாளை தொடங்குகிறது. பாதுகாப்பு பணியில் 1,800 போலீசாரும், 300 ஊர்காவல்படையினரும் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டுத்திருவிழா நாளை (வியாழக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி அடுத்த மாதம் (செப்டம்பர்) 8-ந் தேதி கொடியிறக்கத்துடன் முடிவடைகிறது.

இந்த விழாவில் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் 3 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருவிழா தொடர்பான பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணிகள் திருச்சி சரக ஐ.ஜி. வரதராஜலு, தஞ்சை சரக டி.ஐ.ஜி., லோகநாதன் ஆகியோரின் ஆலோசனைப்படி நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன் தலைமையில் நடைபெற்று வருகிறது.

திருவிழாவில் திருட்டு, செயின் பறிப்பு ஆகிய குற்றங்களை தடுக்க நாகை மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த தாலுகா, ஆயுதப்படை மற்றும் சிறப்பு போலீஸ் படையை சேர்ந்த 1,800 போலீசாரும், 300 ஊர்காவல்படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

மேலும் பேராலயத்தை சுற்றி 65 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு உயர் அதிகாரிகள் தலைமையில் கண்காணிப்பு பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தற்போது உள்ள தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக 6 இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் தீவிர வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டு வாகனங்கள் வேளாங்கண்ணிக்குள் அனுமதிக்கப்படுகின்றன.

மேலும் மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர் குழுக்கள் பேராலயத்திற்கு வரும் அனைத்து பக்தர்கள் மற்றும் அவர்களது உடமைகளை முழுவதுமாக சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது.

பாத யாத்திரையாக அதிக அளவில் பக்தர்கள் வருவதால் சாலை விபத்துக்களை தடுப்பதற்கு 4 நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன. பேராலயத்திற்கு வரும் பக்தர்களுக்கு உதவியாக 15 இடங்களில் காவல் உதவி மையமும், திருட்டு, செயின் பறிப்பு உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 5 குற்ற தடுப்பு பிரிவு குழுக்களும் செயல்பட்டு வருகிறது.

வேளாங்கண்ணி கடற்கரை பகுதியில் பக்தர்கள் கடலில் குளிக்கும்போது அசம்பாவிதம் எதுவும் ஏற்படாமல் இருக்க உயிர்காக்கும் வகையில் போலீசார் அதிவேக படகு மற்றும் உயிர்காக்கும் கவசத்துடன் கடற்கரையில் நிறுத்தப்பட உள்ளனர். கடற்கரை பகுதியிலும், பேராலயத்திலும் தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று தஞ்சை சரக டி.ஐ.ஜி. லோகநாதன், வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்தார். அங்கு போலீசாரின் பாதுகாப்பு ஏற்பாடுகள், கண்காணிப்பு கேமராக்கள் கட்டுப்பாட்டு அறைக்கு சென்று ஆய்வு செய்தார்.



Tags:    

Similar News