ஆன்மிகம்
சூரசம்ஹாரம்

சூரசம்ஹாரம் உணர்த்தும் தத்துவம்

Published On 2020-11-20 09:02 GMT   |   Update On 2020-11-20 09:02 GMT
ஆணவம் அழிந்து ஞானமும் பெற்றுவிட்டால் எந்த ஆன்மாவுமந்தப் பரமாத்மாவோடு ஐக்கியமாகிவிடலாம் என்பது கந்த சஷ்டி சொல்லும் வாழ்க்கை ரகசியம்.
முருகக் கடவுளின் பராக்கிரமங்களைச் சொல்வது சூரசம்ஹாரம். சூரபத்மன் ஆணவத்தில் முருகக் கடவுளோடு போர்புரிந்தான். தன் வலிமையாலும் மாயையாலும் முருகனை வெல்ல நினைத்தான். ஆனால், ஆதிமுதல்வானான ஈசனின் மகனுக்கு முன்பாக அவை தோற்றன. முருகனின் கை வேலுக்கு சக்திவேல் என்றுபெயர். அன்னையே தன் அம்சமாக அந்த வேலை முருகக் கடவுளுக்கு வழங்கினார். அந்த சக்திவேல் சூரர் படையை அழித்தது.

வீரத்தால் முருகனை வெல்ல முடியாது என்றுணர்ந்த சூரபத்மன், இறுதியில் தன் மாயையால் வெல்ல நினைத்து மாமரமாகி நின்றான். வீரத்தை வெல்ல சக்தியாக நின்ற வேல், மாயையை வெல்ல ஞானவேலாக மாறியது. மாயையை இருகூராகக் கிழித்தது. ஞானத்தின் தீண்டுதலால் மாயை அகல அந்த மாமரம், மாயை அற்ற சேவலாகவும் மயிலாகவும் மாறியது. சூர சம்ஹாரம், ஞான உபதேசமாக மாறிப்போக பகைவனான சூரபத்மன் முருகக் கடவுளின் புகழ்போற்றும் கொடியும் வாகனமும் ஆனான். ஆணவம் அழிந்து ஞானமும் பெற்றுவிட்டால் எந்த ஆன்மாவுமந்தப் பரமாத்மாவோடு ஐக்கியமாகிவிடலாம் என்பது கந்த சஷ்டி சொல்லும் வாழ்க்கை ரகசியம்.

அந்த ஞானத்தைப் பெற்றுத் தரும் அற்புத விரதமே கந்த சஷ்டி. முருகபக்தர்கள் ஆறுநாள்கள் விரதமிருந்து முருகனை வழிபடுவர்.

ஆறுநாள்களும் தினமும் அதிகாலையில் எழுந்து குளித்து திருநீறு தரித்து, முருகக் கடவுளை வணங்க வேண்டும். அருகில் இருக்கும் ஆலயங்களுக்குச் சென்று வணங்குவது சிறப்பு. குறிப்பாக, யாகசாலை அமைத்து பூஜைகள் நடைபெறும் ஆலயங்களுக்குச் செல்வது விசேஷம். ஆறுநாள்களும் உண்ணா நோன்பிருக்க வேண்டும்.
ஆறுமுகன்

ஒருசிலர் பால் பழம் உட்கொள்வது வழக்கம். ஒருசிலர் ஒரு வேளை மட்டும் உப்பில்லா உணவை உண்பர். எதுவாக இருந்தாலும் ஆறுநாள்களும் ஒரே மாதிரி வழக்கத்தைப் பின்பற்றுவது நன்று.

முருகனின் பெருமைகளைப் பாடும், கந்த சஷ்டிக் கவசம், கந்த குரு கவசம், வேல்மாறல், வேல் வகுப்பு போன்ற துதிகளை நாள்முழுவதும் பாட வேண்டும். இதன்மூலம் மன ஒருமைப்பாடு சாத்தியப்படும்.

ஆறாவது நாள் சூரசம்ஹாரத்தை தரிசித்து நீராடிப் பின் முருகனை வழிபட வேண்டும். ஒருசிலர் சூரசம்ஹாரம் முடிந்ததும் உணவு எடுத்துக் கொள்வார்கள். அது தவறு. ஏழாவது நாள் காலையில் முருகப் பெருமானை தரிசித்த பின்பு உணவு உண்டு விரதம் முடிப்பதே சிறந்தது.

விரதத்தில் முக்கியமானது பக்தி. இந்த ஆறுநாள்களும் முருகனை மனதில் நினைத்துத் துதித்த வண்ணம் இருக்க வேண்டும். அவ்வாறு விரதம் இருந்தால் முருகப் பெருமானின் அருள் ஸித்திக்கும் என்பது நம்பிக்கை.

சூரபத்மனை வென்ற இடமாதலின் இங்கு வந்து நோன்பு நோற்பதையே மக்கள் சிறப்பாக கருதுகின்றனர். நோன்பு நோற்பவர் இக்கோயிலின் எல்லை தாண்டி ஆறு நாட்களும் செல்வதில்லை என உறுதி பூணுகின்றனர்.

கோயிலுக்கு வடக்கு எல்லையாக வள்ளி குகையும், தெற்கே நாழிக்கிணறும், கிழக்கே கடலும், மேற்கே தூண்டு கை விநாயகர் கோயிலும் எல்லைகளாக கொள்ளப்படுகின்றன. இவ்விடம் கடற்கரை உள்ளதால் நோய் நீக்கம் ஏற்படுவதாக கருதப்படுகிறது.

ஐப்பசி மாதம் அமாவாசையன்று மாலையில் இருந்து இந்நோன்பு தொடங்கப்படுகின்றது. ஆறு நாட்களும் உமிழ்நீர் கூட விழுங்காமல் இருப்பவரும் உண்டு. இவ்வாறு செய்ய இயலாதவர்கள் நண்பகலில் ஆறு மிளகையும், ஆறு கை நீரையும் அருந்தலாம்.

உயிர், உணர்ச்சி வளர்க்கும் விரதமாதலின் பழச்சாறு பருகுதல் தவிர்க்கப்படுகிறது. இவ்விரதத்தில் உண்ணா நோன்புடன் மௌன விரதம் கடைப்பிடிப்பவரும் உண்டு. ஒரு சிலர் பகல் 1 மணிக்கு மட்டும் பச்சரிசி சோறு உண்கின்றனர். சிலர் துளசியும் தண்ணீரும் மட்டும் உட்கொள்கின்றனர். சஷ்டிக்கு அடுத்த நாள் சிவனடியாரோடு உணவு உண்கின்றனர்.
Tags:    

Similar News