ஆன்மிகம்
சுசீந்திரம் கோவில்

ஆகமவிதி கடைப்பிடிக்கப்படும் சுசீந்திரம் கோவில்

Published On 2020-01-11 06:41 GMT   |   Update On 2020-01-11 06:41 GMT
சைவத்திற்கும், வைணவத்திற்கும் ஒரே போல் முக்கியத்துவம் கொடுத்து சிவன், விஷ்ணுவிற்கு பூஜைகளும், திருவிழாக்களும் இங்கு நடைபெற்று வருவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
பலவிதங்களில் சிறப்புடைய சுசீந்திரம் திருக்கோவிலின் பூஜை முறைகளில் தனித்தன்மை காண முடிகிறது. பல மன்னர்களால், பல கால கட்டங்களில் திருப்பணிகள் செய்யப்பட்டு முழுமையான திருக்கோவிலாக திகழ்கின்றது. இந்து மதத்தின் அனைத்து தெய்வங்களையும் இங்கு காணலாம். சைவத்திற்கும், வைணவத்திற்கும் ஒரே போல் முக்கியத்துவம் கொடுத்து சிவன், விஷ்ணுவிற்கு பூஜைகளும், திருவிழாக்களும் இங்கு நடைபெற்று வருவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தாகும்.

தமிழகத்து சிவாச்சாரியர்களும் (பட்டர்கள்) கர்நாடகத்தை சேர்ந்த துளு போற்றி மார்களும், கேரளத்து மலையாள நம்பூதிரிமார்களும் இந்த கோவிலில் பூசாரிகளாக உள்ளனர். கொன்றையடி திருக்கோவிலின் தந்திரியாக பட்டர் எனப்படும் நம்பூதிரி களும், உற்சவ மூர்த்திகளுக்கு பூஜைகள் செய்ய திருக் கோவிலுடைய வட்டப்பள்ளி ஸ்தானிகரின் ஆட்களும் இருந்து வருகின்றன.

தெக்கிடம் பெருமாள் என அழைக்கப்படும் விஷ்ணுவின் திருவுருவமானது கடுச்சரை யோகதால் (மருந்து) உருவாக்கப்பட்டு அவர் எப்போதும் அலங்காரப்பிரியராகவும், சிவன் அபிஷேகப்பிரியராகவும் இங்கு காட்சி தருகின்றனர். விஷ்ணுவாகிய பெருமாளுக்கு அபிஷேகம் கிடையாது. இங்குள்ள உற்சவ மூர்த்திகளுக்கு விசேஷ நாட்களில் மட்டுமே அபிஷேகங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்திரன் வந்து அர்த்தசாம பூஜை (இந்திரன்பூஜை) செய்வதாக ஐதீகம் உள்ள இந்த கோவிலில் இரு பூசாரிகள் (மேல்சாந்தி) மாறி, மாறி இரண்டு சன்னதிகளிலு மாக பூஜை செய்து வருகின்றனர்.

இரண்டு சன்னதிகளில் (பெருமாள், தாணு மாலயன்), புதிதாக பூஜைக்கு வருபவர்கள் மூலஸ்தானத்தின் முன் நின்று 'அகம் கண்டதை புறம் கூற மாட்டேன்' என்ற சத்திய பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்த பின்பு தான் கருவறைகளில் (மூலம் தானம்) பூஜை செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

இந்த நிகழ்ச்சியை நடத்தி மந்திரம் உபதேசம் செய்து கொடுக்கும் அதிகாரம் மற்றும் அனுமதி திருக்கோவிலுடைய வட்டப்பள்ளி ஸ்தானிகருக்கு இன்றும் இருந்து வருகிறது. இது கால காலமாய் நடைபெற்று வருகிறது.

விழா காலங்களில் இரவு இறைவன் வீதி உலா முடிந்து திருக்கோவிலினுள் வந்த பிறகே தீபாராதனை, பூஜைகள், ஸ்ரீபலி போன்றவை நடைபெறுகிறது. வேறு எந்த கோவிலிலும் நடைபெறாத ஆகம விதி பல காலமாக இங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மேலும் தாணுமாலயன் சன்னதியில், குழந்தைகளுக்கு பெயர் சூட்டும் வைபவம் மிகவும் முக்கியத்துவம் பெற்றதாகும். கேரளாவில் முதல்-மந்திரியாக இருந்த பட்டம் தாணுபிள்ளை, ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ஐ.சி.எஸ்.பதவி வகித்த தாணு அய்யர் போன்றவர்களுக்கு கூட இங்கு பெயர் சூட்டுதல் வைபவம் நடந்ததாக அறிய முடிகிறது. இது தற்போதும் நடைபெற்று வருகிறது, அதனை திருக்கோவிலுடைய ஸ்தானிகரே செய்து வருகிறார்.
Tags:    

Similar News