ஆன்மிகம்
சிவன்

செந்துறை மகாதேவர் கோவில்

Published On 2019-07-03 01:30 GMT   |   Update On 2019-07-03 01:30 GMT
அரியலூர் மற்றும் செந்துறை பகுதியை ஆட்சிபுரிந்த சிற்றரசர் ஒருவரால் உருவாக்கப்பட்டதே ‘செந்துறை மகாதேவர் கோவில்.’ இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
மன்னராட்சி காலத்தில், அரசர்கள் தங்களின் குடிமக்களை நல்வழிப்படுத்த ஆலயங்களை எழுப்பினர். ஒவ்வொரு ஊரையும் நிர்மாணிக்கும் போது, முதலில் அங்கு ஒரு கோவிலை ஸ்தாபனம் செய்வதை மரபாக கடைப்பிடித்தனர். அப்படி அமைக்கப்படும் கோவில்கள், வெற்றியின் சின்னமாகவோ, திட்டத்தின் அடையாளமாகவோ அல்லது இறையனுபூதி பெற்ற அடியாரின் நினைவாகவோ எழுப்பப்பட்டதாக இருக்கும். கோவிலானது மக்கள் மனதில் நிலைத்து நிற்க வேண்டும் என்பதற்காகவே இத்தகைய பின்புலம் உருவாக்கப்பட்டது. இந்த அடிப்படையில் அரியலூர் மற்றும் செந்துறை பகுதியை ஆட்சிபுரிந்த சிற்றரசர் ஒருவரால் உருவாக்கப்பட்டதே ‘செந்துறை மகாதேவர் கோவில்.’

சிவந்த மண்ணையும் நீர்வளத்தையும் கொண்டிருந்ததால் ‘தன்பொழில் செந்துறை’ என்றும், ஊரின் ஒரு பகுதி காரைச்செடிகள், வெள்வேலமரம், புளி, இலுப்பை, கருங்காலி, வன்னி, விளா போன்ற மரங்கள் சூழ்ந்த வனமாக இருந்தமையால் ‘காரைக்காட்டு தண்டநாடு’ என்றும் இந்த ஊர் அழைக்கப்பட்டுள்ளதாக விக்கிரம சோழன் காலத்திய கல்வெட்டு கூறுகிறது. காலப்போக்கில் நெய் வனம் என்று அழைக்கப்பட்ட இந்த வனத்தில், மகாசித்தர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அதனால் இந்த ஊர் ‘சித்தர்துறை’ என்று அழைக்கப்பட்டு, நாளடைவில் மருவி ‘செந்துறை’ என்றானதாக சொல்லப்படுகிறது.

அந்த சித்தர் உருவாக்கிய ஏரி, ‘சித்தர் ஏரி’ என்று பெயர் பெற்று, தற்போது சித்தேரி என்று வழங்கப்படுகிறது. இந்த மகாசித்தர் ஒரு வில்வமரத்தின் கீழ் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து மாகேஸ்வர பூஜை வழிபாடுகள் செய்து வந்தார். அதன்பலனாக அவர் அஷ்டமா சித்திகளும் கைவரப் பெற்றவராக விளங்கினார். இவரின் சக்தியை புரிந்த மக்கள் இவரை நாடிவந்து அருளாசிப் பெற்றுச் சென்றனர்.

பல ஆண்டுகள் குழந்தை பேறின்றி கவலையோடு இருந்த, இப்பகுதியை ஆட்சிபுரிந்த சிற்றரசனுக்கு சித்தர் பற்றிய தகவல் கிடைத்தது. அவன் சித்தரை சந்தித்து அவரைப் பணிந்தான். அவன் தனக்கு என்ன வேண்டும் என்று சொல்லும் முன்பே, “நீ வந்திருப்பதன் நோக்கம் எனக்குத் தெரியும். குழந்தை வரம் கேட்டு வந்திருக்கிறாய். இப்பகுதியில் ஒரு சிவாலயம் எழுப்பி வழிபடு. உனக்கு குழந்தைபேறு கிடைக்கும்” என்று கூறினார். அதுகேட்ட சிற்றரசன் மெய்சிலிர்த்து, அவர் சொன்னபடியே ஒரு பெரிய சிவாலயத்தை கட்ட திட்டமிட்டான். ராஜராஜசோழனின் அனுமதி பெற்று, சிற்றரசன் இந்த ஆலயத்தை கட்டியதாகவும், பின்னர் அவனுக்கு குழந்தை பாக்கியம் கிடைத்ததாகவும் தல வரலாறு சொல்கிறது.

சிற்றரசனுக்கு அருள்பாலித்த சித்தரின் சமாதி ஆலயத்தின் வடக்கு வீதியில், ஆலயத்தின் பின்புறம் அமைந்துள்ளது. சிற்றரசனின் வேண்டுகோளை தீர்த்துவைத்த இத்தல இறைவனின் திருநாமம் ‘தீர்க்கபுரீஸ்வர்’ என்பதாகும். இவர் தற்போது ‘சிவதாண்டீஸ்வரர்’ என்று அழைக்கப்படுகிறார்.

தஞ்சை பெரியகோவில் கட்டுவதற்கு முன்பாக கட்டப்பட்டுள்ள இவ்வாலயம், வரலாற்றுச் சிறப்பும் பழமையும், பெருமையும் கொண்ட தாகும். இவ்வாலயம் பற்றிய குறிப்புகள் 5 கல்வெட்டுகளிலும், 2 செப்பேடுகளிலும் இடம்பெற்றுள்ளன. முழுக்க முழுக்க வெள்ளைக்கல் எனப்படும் சுண்ணாம்புக் கல்லால் இவ்வாலயம் கட்டப்பட்டுள்ளது. இதுபோன்ற கட்டுமானங்களை செந்துறையைச் சுற்றியுள்ள ராயம்புரம், சென்னிவனம், ஓட்டக்கோயில், தாமரைப்பூண்டி, பெரியாக்குறிச்சி, கொடுக்கூர் ஆகிய ஊர்களில் உள்ள சிவாலயங்களிலும் காணமுடிகிறது. கருங்கல்லால் ஆன கோவில்கள் எதுவும் இப்பகுதியில் இல்லை.

ஆலய அமைப்பு :

ஊருக்கு வடகிழக்கில் அமைந்துள்ள இவ்வாலயம், கிழக்கு நோக்கி ஐந்துநிலை ராஜகோபுரத்துடன் ரம்மியமாக காட்சியளிக்கிறது. ஒரேயொரு திருச்சுற்றுடன் கருவறை அர்த்த மண்டபம், மகாமண்டபம், திருச்சுற்று மாளிகை மற்றும் பரிவார ஆலயங்கள் அமைந்துள்ளன. ராஜகோபுரத்தை அடுத்து கொடிமரம், பலிபீடம், நந்தியம் பெருமான் உள்ளனர். தொடர்ந்து உள்கோபுரம் காணப்படுகிறது. அதன் இடதுபுறம் விநாயகப் பெருமானும், வலதுபுறமாக முருகப்பெருமானும் அருள்பாலிக்கின்றனர். ராஜகோபுரத்திற்கும் உட்கோபுரத்திற்கும் இடைபட்ட பகுதியில், இடதுபுறம் ஆலய யாகசாலை மண்டபமும், வலதுபுறம் வாகனமண்டபமும் இடம் பெற்றுள்ளன.

உள்கோபுரம் அடுத்த மகாமண்டபத்தின் வாசலைத் தாண்டி ஆலயத்திற்குள் நுழைந்தால், கருவறையில் வேண்டிய வரம் தரும் சிவதாண்டீஸ்வரர், சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். மகாமண்டபத்தில் விநாயகர், நடராஜர் மற்றும் உற்சவர் திருமேனிகள் இடம் பெற்றுள்ளன. பிரகாரச்சுற்றில் மேற்கில் மடப்பள்ளி, வன்னிமரம், அறுபத்துமூவர் மற்றும் சப்தமாதர்கள் சன்னிதிகளும், வடக்கு பிரகாரத்தில் தல விநாயகரான கோடிவிநாயகர், நால்வர், சிவன், வள்ளி - தெய்வானை சமேத முருகப்பெருமான் சொக்கநாதர், விசுவநாதர், பஞ்சலிங்கங்கள் மற்றும் கஜலட்சுமி எழுந்தருளியுள்ளனர்.

மூலவர் கருவறை அமைந்துள்ள இடத்திற்கு நேர் கிழக்காக, பிரகாரச்சுற்றில் அம்பாளின் கருவறையும், அண்ணாமலையாரின் சிறிய சன்னிதியும் இடம்பெற்றுள்ளன. சுவாமி மற்றும் அம்பாள் சன்னிதிகளுக்கு இடையே சண்டிகேஸ்வரர் இருக்கிறார். திருச்சுற்று மாளிகையின் வடகிழக்கு மூலையில் நடராஜர் சபை உள்ளது. இதில் கயிலாயக் காட்சியும், நால்வர் மற்றும் வள்ளலார் படங்கள் காணப்படுகின்றன. அடுத்தாற்போல நவக்கிரக சன்னிதி அமைந்துள்ளது. அதனைத் தொடர்ந்து கிழக்கில் பைரவர், சூரியர், சந்திரர் (சிவலிங்க வடிவில்) இடம்பெற்றுள்ளனர்.

இந்துசமய அறநிலைய ஆட்சித் துறையின் கீழ் இயங்கி வரும் இவ்வாலயத்தில், தினசரி நான்குகால பூஜைகள் நடைபெறுகின்றன. தவிர சிவாலயங்களில் நடைபெறும் மாத உற்சவங்களும், சித்திரை பிறப்பு, வைகாசி விசாகம், ஆனி உத்திரம், ஆடிப்பூரம், புரட்டாசி நவராத்திரி விழா, கார்த்திகை தீபவிழா, சோமவார உற்சவம், மார்கழி தரிசனம், தைப்பூசம் போன்ற வருடாந்திர விழாக்களும் சிறப்பாக நடத்தப்பெறுகிறது. பங்குனி மாதம் பத்து நாட்கள் பிரம்மோற்சவம் நடத்தப் பெறுகிறது.

சித்திரைமாதம் முதல்நாளன்று சூரியன் காலை 6.05 மணிக்கு இவ்வாலய பெருமானை வழிபடுகிறார். இந்நாட்களில் சுவாமியும், அம்பாளும் வீதியுலா செல்கிறார்கள். இந்தக் கோவில் தினமும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

அமைவிடம்:

சென்னை - திருச்சி கார்டுலைன் ரெயில் மார்க்கத்தில் இந்த ஆலயம் அமைந்துள்ளது, அருகாமை ரெயில்நிலையம் செந்துறை மற்றும் அரியலூர். சென்னை, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், அரியலூர், ஜெயங்கொண்டம், திட்டக்குடி, பெண்ணாடம் ஆகிய ஊர்களில் இருந்து நேரடி பேருந்து வசதி உள்ளது.

நெய்வாசல் நெடுஞ்செழியன்
Tags:    

Similar News