செய்திகள்
சால்வடார் சீன்புகோஸ்

அமெரிக்காவில் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் மெக்சிகோ முன்னாள் ராணுவ மந்திரி கைது

Published On 2020-10-17 18:16 GMT   |   Update On 2020-10-17 18:16 GMT
அமெரிக்காவில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பண மோசடி தொடர்பான குற்றச்சாட்டுகளில் மெக்சிகோ முன்னாள் ராணுவ மந்திரி கைது செய்யப்பட்டார்.
மெக்சிகோ சிட்டி:

மெக்சிகோவில் கடந்த 2012 முதல் 2018 வரை ராணுவ மந்திரியாக இருந்தவர் சால்வடார் சீன்புகோஸ். 72 வயதான இவர் நேற்றுமுன்தினம் தனது குடும்பத்தினருடன் அமெரிக்கா சென்றார்.

கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையத்துக்கு வந்த சால்வடார் சீன்புகோஸ் மற்றும் அவரது குடும்பத்தினரை அமெரிக்க போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அதன் பின்னர் குடும்பத்தினரை விடுவித்த போலீசார் சால்வடார் சீன்புகோசை மட்டும் தடுப்பு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

போதைப்பொருள் கடத்தல் மற்றும் பண மோசடி தொடர்பான குற்றச்சாட்டுகளில் சால்வடார் சீன்புகோஸ் கைது செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். அதேசமயம் இது பற்றிய கூடுதல் தகவல்களை வழங்க அவர்கள் மறுத்து விட்டனர்.

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தங்கள் நாட்டின் முன்னாள் ராணுவ மந்திரி கைது செய்யப்பட்டுள்ளதை மெக்சிகோ வெளியுறவு மந்திரி மார்செலோ எப்ரார்ட் உறுதிபடுத்தினார். அதேசமயம் அவரும் இந்த கைது நடவடிக்கையின் பின்னணி குறித்த கூடுதல் தகவல்களை வழங்கவில்லை.

வர்த்தகம் மற்றும் எல்லை சுவர் தொடர்பாக அமெரிக்கா மற்றும் மெக்சிக்கோ இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு நீடித்து வரும் சூழலில் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் மெக்சிகோவின் முன்னாள் ராணுவ மந்திரி அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News