செய்திகள்
கோப்புப்படம்.

கால்நடைகளுக்கு வெளிநாட்டு தீவனப்பயிரை வழங்கக்கூடாது- வேளாண் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Published On 2021-07-19 08:27 GMT   |   Update On 2021-07-19 08:27 GMT
கறவை மாடு வளர்ப்போர் ‘சூப்பர் நேப்பியர்’ எனப்படும் வெளிநாட்டு தீவனப்பயிர்களை கறவை மாடுகளுக்கு வழங்குகின்றனர்.
அவிநாசி:

சமீபகாலமாக கறவை மாடுகளின் இனப்பெருக்கம் தள்ளி போகிறது. சினை பிடிக்காத நிலை ஏற்படுகிறது என்ற புகார் அதிகரித்துள்ளது. 

இது தொடர்பாக  திருப்பூர் மாவட்டம் பொங்கலூரில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள்  கள ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது  நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஆனந்தராஜா கூறியதாவது:-

கறவை மாடு வளர்ப்போர், ‘சூப்பர் நேப்பியர்’ எனப்படும் வெளிநாட்டு தீவனப்பயிர்களை கறவை மாடுகளுக்கு வழங்குகின்றனர். தீவனப்பயிரில் ‘ஆக்ஸாலிக்‘ அமிலத்தின் அளவு 2.8 சதவீதத்துக்கும் குறைவாக இருக்க வேண்டும். ஆனால் சூப்பர் நேப்பியர் தீவன பயிரில் அதன் அளவு அதிகம்.

இதை தொடர்ந்து உண்பதால் கறவை மாடுகளின் சாணம் மற்றும் சிறுநீரகம் வழியாக அதிகளவு கால்சியம் சத்து வெளியேறிவிடும்.இதனால் சினை பிடிப்பதில் காலதாமதம் ஏற்படும். சினை பிடித்தாலும் கன்று ஈனும் போது  மாடுகள் பலவீனமாகி எழுந்து நிற்க முடியாத நிலைக்கு தள்ளப்படும்.

எனவே ‘சூப்பர் நேப்பியர்’ தீவனப்பயிரை கால்நடைகளுக்கு வழங்கக்கூடாது என அகில இந்திய தீவனப்பயிர் ஆராய்ச்சி கழகம் , கோவையில் உள்ள தமிழ்நாடு தீவனப்பயிர் ஆராய்ச்சி கழகத்தினர் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். 

அதற்கு மாற்றாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலை அறிமுகப்படுத்தியுள்ள கோ- 3, கோ- 4 ,கோ- 5 ஆகிய புல் வகைகளை கறவை மாடுகளுக்கு தீவனமாக வழங்க வேண்டும் என்றார். 
Tags:    

Similar News