செய்திகள்
கே பாலகிருஷ்ணன்

அரசு ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்- கே.பாலகிருஷ்ணன் கோரிக்கை

Published On 2021-02-23 01:11 GMT   |   Update On 2021-02-23 01:11 GMT
அரசு ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
சென்னை:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

அரசுத் துறையில் உள்ள 4.50 லட்சம் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்புதல், ஆதிசேஷய்யா கமிஷனின் பரிந்துரைகளை நிராகரித்தல், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமலாக்குதல், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு உயிரிழந்த முன்களப் பணியாளர்களுக்கு ரூ.50 லட்சம் நஷ்ட ஈடு வழங்குதல் போன்ற பல்வேறு கோரிக்கைகளுக்காக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மற்றும் ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினர் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக கடந்த 19-ந் தேதி, பெருந்திரள் முறையீட்டுக்காக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் சென்னையில் குவிந்தனர். தங்களை (முதல்-அமைச்சரை) நேரில் சந்தித்து கோரிக்கைகளை வலியுறுத்தி பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பது என்பதுதான் அவர்களது நோக்கம். அரசு தரப்பில் அவர்களை அழைத்து பேசுவதற்கு பதிலாக, பல்வேறு இடங்களில் காவல்துறையினர் தடியடி பிரயோகம் செய்துள்ளனர்.

அதில், பெண் ஊழியர் உள்பட 7 பேர் படுகாயமுற்று மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது. இன்னும் பலர் காயமடைந்துள்ளனர். சிலருக்கு எலும்பு முறிவும் ஏற்படும் அளவுக்கு தடியடி நடத்தப்பட்டுள்ளது. இத்தகைய மனித உரிமை மீறலுக்கு காரணமான போலீசார் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News