இந்தியா
பிபின் ராவத் உடன் மனோஜ் முகுந்த் நரவனே

முப்படைகளின் புதிய தலைமை தளபதி யார்?: நரவனேக்கு அதிக வாய்ப்பு

Published On 2021-12-10 03:22 GMT   |   Update On 2021-12-10 03:22 GMT
சீனா, பாகிஸ்தான் என இருபெரும் அச்சுறுத்தலை எதிர்கொண்டு வரும் இந்திய முப்படைகளுக்கு தலைமை தாங்கும் அந்த வலிமையான தளபதி யார்? என்ற எதிர்பார்ப்பு நாடு முழுவதும் ஏற்பட்டு உள்ளது.
புதுடெல்லி :

கார்கில் போருக்குப்பின் இந்திய பாதுகாப்பு அமைப்புகளில் உள்ள இடைவெளியை ஆய்வு செய்வதற்காக சிறப்பு கமிட்டி அமைக்கப்பட்டது.

இந்த கமிட்டி, ராணுவ மந்திரிக்கு ஒற்றை பாதுகாப்பு ஆலோசகராக முப்படை தலைமை தளபதி என ஒருவரை நியமிக்க வேண்டும் என அரசுக்கு அறிவுறுத்தியது. அதன்படி இந்திய முப்படைகளுக்கு தலைமை தளபதி என்ற பதவி உருவாக்கப்பட்டது.

இதில் முதல் தளபதியாக கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பரில் ஓய்வு பெற்ற பிபின் ராவத்தை மத்திய அரசு நியமித்தது. இவர் கடந்த ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் அந்த பதவியில் இருந்து வந்தார்.

இவரது பதவிக்காலம் 2023-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை இருந்த நிலையில், நேற்று முன்தினம் குன்னூரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் தனது மனைவியுடன் பிபின் ராவத் பலியானார்.

இதனால் அவர் வகித்து வந்த முப்படை தலைமை தளபதி பதவி காலியாகி விட்டது. நாட்டின் பாதுகாப்பில் மிகவும் உயர்ந்த பதவி என்பதால் உடனடியாக அந்த இடத்தை நிரப்ப வேண்டிய கட்டாயம் மத்திய அரசுக்கு ஏற்பட்டு உள்ளது.

எனவே பிபின் ராவத்தின் இறுதிச்சடங்குகள் இன்று (வெள்ளிக்கிழமை) நிறைவடைந்ததும், புதிய முப்படை தளபதியை தேர்வு செய்யும் பணிகளை மத்திய அரசு தொடங்கும் என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இதற்காக முப்படையிலும் உள்ள மூத்த தளபதிகள் அடங்கிய சிறு குழு ஒன்றை மத்திய அரசு அமைக்கும் என டெல்லி வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. இந்த குழுவினர் 3 படைகளில் இருந்தும் அடுத்த ஓரிரு நாட்களில் பரிந்துரைகளை பெற்று புதிய தலைமை தளபதிக்கான பெயர்களை ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங்குக்கு அனுப்பி வைப்பார்கள்.

இந்த குழுவின் பரிந்துரைக்கு ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்ததும், அது கேபினட்டின் நியமனங்கள் குழுவுக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த கமிட்டி நாட்டின் புதிய தலைமை தளபதியை தேர்வு செய்யும் என அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

தற்போதைய நிலையில் ஒட்டுமொத்த செயல்பாடுகளின் அடிப்படையில் ராணுவ தளபதி நரவனேக்கே முப்படை தலைமை தளபதி ஆகும் அதிக வாய்ப்பு இருப்பதாக மூத்த மற்றும் ஓய்வு பெற்ற தளபதிகள் பலர் தெரிவித்து உள்ளனர். ஏனெனில் கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி 31-ந்தேதி முதல் ராணுவ தளபதியாக பதவி வகித்து வரும் இவரே தற்போதைய முப்படை தளபதிகளில் மூத்தவர்.

அந்தவகையில் விமானப்படை தளபதி வி.ஆர்.சவுத்ரி, கடற்படை தளபதி ஹரிகுமார் ஆகியோர் முறையே கடந்த செப்டம்பர் மற்றும் நவம்பர் 30-ந்தேதிகளில் அந்தந்த பொறுப்பை ஏற்றிருந்தனர்.

இதைப்போல சீனாவுடனான மோதல் நீடித்து வரும் கிழக்கு லடாக் விவகாரத்தையும் ராணுவ தளபதி நரவனேயே திறம்பட கையாண்டு வருகிறார். இதுவும் அவருக்கு கூடுதல் வாய்ப்பாக கருதப்படுகிறது.

சீனா, பாகிஸ்தான் என இருபெரும் அச்சுறுத்தலை எதிர்கொண்டு வரும் இந்திய முப்படைகளுக்கு தலைமை தாங்கும் அந்த வலிமையான தளபதி யார்? என்ற எதிர்பார்ப்பு நாடு முழுவதும் ஏற்பட்டு உள்ளது.
Tags:    

Similar News