செய்திகள்
கைது

பரமத்திவேலூர், வசந்தபுரத்தில் கோவில்களில் நகை, கலசம் திருடியவர் கைது

Published On 2020-10-18 10:47 GMT   |   Update On 2020-10-18 10:47 GMT
பரமத்திவேலூர், வசந்தபுரத்தில் கோவில்களில் நகை, கலசம் திருடியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பரமத்திவேலூர்:

ஜேடர்பாளையம் அருகே உள்ள வடுகபாளையத்தில் மாரியம்மன், பகவதியம்மன் மற்றும் சிவன் கோவில்கள் உள்ளது. இந்த கோவில்களை கடந்த 5-ந் தேதி அர்ச்சகர்கள் வழக்கம்போல் கோவிலை பூட்டிவிட்டு சென்று விட்டனர். மீண்டும் மறுநாள் காலை கோவிலுக்கு வந்து பார்த்தபோது முன்பக்க கிரில் கேட் உடைக்கப்பட்டு அம்மன் சிலைகளின் மீது இருந்த தாலி காணாமல் திருட்டு போனது. தெரிய வந்தது. இதுகுறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வந்தனர். இதேபோல் நல்லூர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட வசந்தபுரத்தில் உள்ள களியபெருமாள் கோவில் கலசத்தை திருடிய மர்ம நபரையும் போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் பரமத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் நேற்று சோழசிராமணி கதவணை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக சந்தேகத்திற்கு இடமாக வந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே சாந்தாம்பாளையம் மேடு பாரதிநகரை சேர்ந்த அண்ணாமலை (வயது 47) என்பது தெரியவந்தது. தொடர் விசாரணையில் அவர் வடுகபாளையத்தில் சிவன், மாரியம்மன் மற்றும் பகவதியம்மன் கோவில்களில் 2 கிராம் தங்கத்தாலி மற்றும் வசந்தபுரம் களியபெருமாள் கோவில் கலசத்தை திருடியது தெரியவந்தது. இதையடுத்து அண்ணாமலையை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 2 கிராம் தங்ககாசையும், கலசத்தை விற்று கையில் வைத்து இருந்த ரூ.1,500 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News