ஆன்மிகம்
வெள்ளியங்கிரி மலையேறும் பக்தர்களை படத்தில் காணலாம்.

வெள்ளியங்கிரி மலை ஏற வந்த பக்தர்கள் தடுத்து நிறுத்தம்

Published On 2021-04-28 08:53 GMT   |   Update On 2021-04-28 08:53 GMT
கோவை அருகே உள்ள வெள்ளியங்கிரி மலை ஏற வந்த பக்தர்களை வனத்துறையினர் தடுத்து நிறுத்தி எச்சரித்து அனுப்பினார்கள்.
கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள பூண்டியில் புகழ்பெற்ற வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. இது தென்கைலாயம் என்று அழைக்கப்படுகிறது. இங்குள்ள 7-வது மலையில் லிங்கம் உள்ளது. இதை தரிசிக்க பக்தர்கள் மலை ஏறுவது வழக்கம். அதுவும் சித்ரா பவுர்ணமி அன்று ஏராளமான பக்தர்கள் மலையேறி சென்று லிங்கத்தை வழிபட்டு திரும்புவார்கள். தற்போது கொரோனா பரவலை தடுக்க கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு உள்ளன.

இதனால் வழிபாட்டு தலங்களுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து கோவில்கள், ஆலயங்கள், மசூதிகள் மூடப்பட்டன. அதுபோன்று வெள்ளியங்கிரி மலை மீது செல்லவும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

மேலும் தடையை மீறி பக்தர்கள் செல்வதை தடுக்க வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று பக்தர்கள் சிலர் வெள்ளியங்கிரி மலைக்கு செல்ல வந்தனர். அவர்களை முள்ளாங்காடு சோதனைசாவடியில் வனத்துறையினர் தடுத்து நிறுத்தினார்கள். அத்துடன் அவர்களை வனத்துறையினர் எச்சரித்து அனுப்பினர்.

இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, வெள்ளியங்கிரி மலைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. எனவே பக்தர்கள் யாரும் செல்லக்கூடாது. தடையை மீறி சென்றால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதை கண்காணிக்க வனத்துறையினர், வேட்டைத்தடுப்பு காவலர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு உள்ளது என்றனர்.
Tags:    

Similar News