செய்திகள்
கொரோனா வைரஸ்

திருப்பூர் மாவட்டத்தில் கூடுதல் கொரோனா சிகிச்சை மையங்கள்

Published On 2021-04-07 10:03 GMT   |   Update On 2021-04-07 10:03 GMT
தொற்று பரவல் அதிகரித்துள்ளதால், மீண்டும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படுமோ என்ற அச்சம், திருப்பூர் பகுதி பொதுமக்களிடம் நிலவுகிறது.

திருப்பூர்:

தமிழகம் முழுதும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில், இரட்டை இலக்கத்தில் இருந்த தொற்று அதிரடியாக 105 ஆக உயர்ந்துள்ளது.அதிக பட்சமாக திருப்பூர் மாநகராட்சியில் 29 பேர், உடுமலை, குன்னத்தூர் மற்றும் ஊத்துக்குளி பகுதிகளில் தலா 12 மற்றும் இதர பகுதிகளில் 5 மற்றும் 6 என்ற எண்ணிக்கையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்டத்தில் 19 ஆயிரத்து 653 பேர், தொற்றால் பாதிக்கப்பட்டு, அதில், 18 ஆயிரத்து 893 பேர் குணமடைந்து மீண்டு வந்துள்ளனர்.

திருப்பூர், கோவை, ஈரோடு பகுதிகளில், 533 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.மாவட்டத்தில் மட்டும், 227 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த ஒரு மாதமாக தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரம் மேற்கொண்டதும், மக்கள் பொது இடங்களில், சமூக இடைவெளியின்றி அதிகளவில் கூடியதும், பெரும் பாலானவர்கள் முக கவசம் அணியாமல் இருந்ததும், கொரோனா தொற்று அதிகரிக்க முக்கிய காரணங்களாக உள்ளது.

இது குறித்து மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் ஜெகதீஷ் குமார் கூறுகையில், ‘தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்க தேவையான மருத்துவ வசதிகள் தயார் நிலையில், படுக்கை வசதிகளுடன் உள்ளது. மேலும் மகாராஜா கல்லூரி உள்ளிட்ட முக்கிய இடங்களில், கூடுதலாக கொரோனா சிகிச்சை மையங்களையும் திறக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம்.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்‘ என்றார்.

தொற்று பரவல் அதிகரித்துள்ளதால், மீண்டும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படுமோ என்ற அச்சம், திருப்பூர் பகுதி பொதுமக்களிடம் நிலவுகிறது. கடந்த 6 மாதங்களாக, கட்டுப்பாடுகளை தளர்த்திய நிலையில், மக்கள் சகஜ நிலைக்கு திரும்பியுள்ளனர்.

கடந்த ஒரு மாதமாகவே, தொற்று அதிகரித்த நிலையில், சட்டசபை தேர்தல் காரணமாக எவ்வித கட்டுப்பாடுகளையும் மேற்கொள்ள முடியாத நிலையில் இருந்த மத்திய, மாநில அரசுகள் இன்று முதல் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள இடங்களில் கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்புகள் உள்ளன. இதனால், மக்கள் கவலையடைந்துள்ளனர்.

திங்கள்கிழமை தோறும், திருப்பூர் தென்னம்பாளையத்தில் மாட்டுச்சந்தை நடைபெறும்.

கேரளா, ஆந்திரா, தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள், கால்நடை வளர்ப்பாளர்கள் வந்து செல்வர்.உள்ளூரில் இருந்து விவசாயிகள் பங்கேற்பர். ஆயிரம் முதல், ஆயிரத்து 200 மாடுகள் விற்பனைக்கு வரும். மதியம் 1 மணி முதல், 5 மணி வரை நடைபெறும் சந்தையில் 65 ஆயிரம் பேர் வரை பங்கேற்பர்.

மாட்டுச்சந்தைக்கு முககவசம் அணிந்து யாரும் வருவதில்லை.

வெளிமாநிலத்திருந்து வருவோரும், உள்ளூர் விவசாயிகள் அலட்சியமாக முககவசம் இல்லாமல் பங்கேற்கின்றனர். கேரளா, ஆந்திராவில் இருந்து வரும் வியாபாரிகளும் முககவசம் அணிவதில்லை.

தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் தொற்று அதிகரித்து வரும் நிலையில், முககவசம் அணியாமல் வியாபாரிகள், கால்நடை வளர்ப்பாளர் அலட்சியமாக பங்கேற்பது பலரை பீதியடைய செய்துள்ளது.

Tags:    

Similar News