செய்திகள்
அய்யாக்கண்ணு

சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 1 லட்சம் விவசாயிகளை திரட்டி போராட்டம்- அய்யாக்கண்ணு முடிவு

Published On 2020-01-21 16:49 GMT   |   Update On 2020-01-21 16:49 GMT
கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 1 லட்சம் விவசாயிகளை திரட்டி போராட்டத்தில் ஈடுபட போவதாக அய்யாக்கண்ணு கூறியுள்ளார்.
திருச்சி:

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் அந்தநல்லூர் ஒன்றிய ஆலோசனைக்கூட்டம் சீராத்தோப்பில் நடந்தது. இதில் மாநிலத்தலைவர் அய்யாக்கண்ணு விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்து பேசினார்.  கூட்டத்தில் விவசாய விளைபொருட்களுக்கு லாபகரமான விலை கொடுக்கும் வரை கூட்டுறவு மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில்  விவசாயிகள் பெற்ற அனைத்து கடன் களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். 

கோதாவரி, காவிரி இணைப்பு திட்டம், மேட்டூர்-அய்யாறு-உப்பாறு இணைப்புத்திட்டம், காவிரி- குண்டாறு-வைகை இணைப்பு திட்டங்களுக்கு உடனடியாக நிதி ஒதுக்க வேண்டும். 60 வயதை கடந்த அனைத்து விவசாயிகளுக்கும், விவசாய கூலி தொழிலாளர்களுக்கும் வாரிசுகள் மற்றும் பட்டா நிலம் இருந்தாலும் மாதம் 5 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்க வேண்டும். உய்யக் கொண்டான் வாய்க்காலில் உள்ள பிரிவு வாய்க்கால், மருதாண்டக்குறிச்சி வாய்க்காலை அளந்து வடிகாலை தூர்வார வேண்டும். 

முள்ளிக்கரும்பூர், வயலூர், ஏகிரிமங்கலம், மருதாண்டக்குறிச்சி, பெருங்குடி, அமிர்தராஜநல்லூர் கிளை வாய்க்கால்களை தூர்வாரி கோடையிலும் விவசாயத்துக்கு தண்ணீர் விட வேண்டும். மரபணு மாற்ற விதைகளை அனுமதிக்கக்கூடாது. இக்கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஒரு லட்சம் விவசாயிகளை திரட்டி ஒரு மாதத்திற்கு அங்கேயே காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் சங்க நிர்வாகிகள் ரங்கராஜ், முருகதாஸ், கார்த்திக்கேயன், கலிங்க ராஜா உட்பட நூற்றுக் கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News