ஆன்மிகம்
ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்கல் விழா (பழைய படம்)

ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்கல் விழா: அவரவர் வீடுகளில் மட்டும் பொங்கலிட அனுமதி

Published On 2021-02-17 04:47 GMT   |   Update On 2021-02-17 04:47 GMT
ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் பொங்கல் விழா வருகிற 19-ந் தேதி தொடங்குகிறது. அவரவர் வீடுகளில் மட்டும் பொங்கலிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம் :

பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் திருவனந்தபுரத்தில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் பொங்கல் விழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும்.

1997, 2009 ஆகிய ஆண்டுகளில் பொங்கலிடுவதில் உலக சாதனையாக கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்தது. இத்தகைய சிறப்பு வாய்ந்த பொங்கல் விழா இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக மிக எளிமையாக கொண்டாட கோவில் அறக்கட்டளை தீர்மானித்து உள்ளது.

நடப்பு ஆண்டு பொங்கல் விழா குறித்து ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் விழாக்குழு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

பொங்கல் விழா நாளை மறுநாள் (19-ந் தேதி) காலை 9.45 மணிக்கு அம்மனுக்கு காப்பு கட்டுடன் தொடங்குகிறது. அன்றைய தினம் மாலை 6 மணிக்கு கோவில் கலையரங்கில் கலை நிகழ்ச்சிகளை நடிகர் நெடுமுடி வேணு தொடங்கி வைக்கிறார். அதே மேடையில் அவருக்கு இந்த ஆண்டுக்கான அம்பா விருது கோவில் அறக்கட்டளை சார்பில் வழங்கப்படுகிறது.

பிரசித்தி பெற்ற பொங்கல் வழிபாடு விழாவின் 9-வது நாளான வருகிற 27- ந் தேதி நடைபெறும். அதாவது மாசி மாதத்தின் கார்த்திகை நட்சத்திரத்தில் ஒவ்வொரு ஆண்டும் விழா நடக்கிறது. 10-வது நாள் 28-ந் தேதி இரவு குருதி தர்ப்பணத்துடன் பொங்கல் விழா நிறைவு பெறும்.

27-ந் தேதி காலை 10.50 மணிக்கு கோவில் பண்டார அடுப்பில் பொங்கல் வழிபாடு நடைபெறும். கொரோனா தொற்று காரணமாக இந்த ஆண்டு கோவில் வளாகம், தெருவீதிகள் மற்றும் சாலையோரங்களில் பொங்கலிட அனுமதி இல்லை. ஆனால் பக்தர்கள் அவரவர் வீடுகளில் பொங்கலிட்டு வழிபாடு நடத்த தடை இல்லை. மாலை 3.40 மணிக்கு பொங்கல் நிவேத்யம் செய்யப்படும். கோவில் பூசாரிகள் பொங்கல் நிவேத்ய சடங்குகளில் பங்கேற்க மாட்டார்கள்.

விழாவையொட்டி சிறுவர்களுக்கான குத்தியோட்ட நேர்ச்சை கொரோனா பரவலை தொடர்ந்து பண்டார ஓட்டத்துடன் முடித்து கொள்ள தீர்மானிக்கப்பட்டு உள்ளது. அதே போல் 10 வயது முதல் 12 வயது வரையிலான சிறுமிகளுக்கான தாலப்பொலி நேர்ச்சை வழிபாடுகளும் கட்டுப்பாட்டுகளுடன் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News