செய்திகள்
விபத்துக்குள்ளான காரையும், காயம் அடைந்தவர்களையும் படத்தில் காணலாம்

மானாமதுரை அருகே இன்று விபத்து - ஓட்டல் அதிபர் மகள் உள்பட 2 பேர் பலி

Published On 2021-11-21 04:05 GMT   |   Update On 2021-11-21 04:05 GMT
கோவிலுக்கு வந்த கார் விபத்தில் சிக்கி 2 பேர் பலியான சம்பவம் மானாமதுரை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மானாமதுரை:

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள தெற்கு சந்தனூரை அடுத்த நெடுங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 45).

இவர் கோவை அருகே உள்ள சேரன்மாநகரில் ஓட்டல் நடத்தி வருகிறார். இதனால் குடும்பத்துடன் கோவையில் வசித்து வருகிறார்.

மானாமதுரை அருகே உள்ள தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவிலுக்கு குடும்பத்துடன் செல்ல அய்யப்பன் திட்டமிட்டார். அவருடன் உறவினர்கள் சிலரும் வருவதாக கூறினர்.

இதனை தொடர்ந்து அய்யப்பன், அவரது மனைவி தேவி (37), மகள்கள் கிரிஜா (18), ஆர்த்தி (17), மகன் திருமலை (16) மற்றும் உறவினர்கள் காரில் நேற்று இரவு கோவையில் இருந்து புறப்பட்டனர். காரை உறவினரான குமார் ஓட்டினார்.

இன்று காலை மானாமதுரை வந்த அவர்கள் வழிபாட்டுக்கு தேவையான பூ மற்றும் பூஜை பொருட்களை வாங்கினர். பின்னர் காரில் புறப்பட்ட அவர்கள் காலை 6.30 மணி அளவில் மானாமதுரை-தாயமங்கலம் சாலையில் சென்று கொண்டிருந்தனர்.

மாங்குளம் விலக்கு அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. அதே வேகத்தில் சாலையோர பள்ளத்தில் இறங்கியது. வேகமாக சென்ற கார் அங்குள்ள தரைபாலத்தில் மோதி நின்றது.

கார் தாறுமாறாக ஓடிய போது அதில் பயணித்தவர்கள் கூச்சலிட்டனர். இதனை கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர்.

இந்த விபத்தில் காரில் வந்த பாண்டி, அய்யப்பன் மகள் ஆர்த்தி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். அவர்களது உடலை பார்த்து உறவினர்கள் கதறினர்.

பலத்த காயம் அடைந்த அய்யப்பன், அவரது மனைவி தேவி, மகள் கிரிஜா, மகன் திருமலை, மதியழகன், அவரது மகன் குமார் (27), திருஞானம் (24), வேல்முருகன் (20), கார்த்திகா (29) ஆகியோர் சிகிச்சைக்காக மானாமதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற பின்னர் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

கோவிலுக்கு வந்த கார் விபத்தில் சிக்கி 2 பேர் பலியான சம்பவம் மானாமதுரை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

விபத்து குறித்து மானாமதுரை சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News