ஆன்மிகம்
நாமக்கல் கோவில்

அனுமன் ஜெயந்தி: முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே நாமக்கல் கோவிலில் அனுமதி

Published On 2021-01-07 08:55 GMT   |   Update On 2021-01-07 08:55 GMT
நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் வருகிற 12-ந் தேதி ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. இதில் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
நாமக்கல் நகரில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் வருகிற 12-ந் தேதி விழா கொண்டாடப்பட உள்ளது. இதில் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே பங்கேற்க முடியும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக கோவில் செயல் அலுவலர் ரமேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தடை செய்யப்பட்ட பகுதியில் இருந்து வருபவர்கள், சமூக இடைவெளியை பின்பற்றாதவர்கள் மற்றும் முககவசம் அணியாமல் வருபவர்களுக்கு கோவிலுக்குள் நுழைய அனுமதி இல்லை. கோவிலில் பக்தர்கள் அதிகாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே அனுமதிக்கபடுவார்கள்.

பக்தர்கள் தரிசனத்திற்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். அதிகாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை ஒவ்வொரு மணி நேரத்திற்கு 750 நபர்கள் கட்டண வழி அல்லது இலவச தரிசன வழியில் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப முன்பதிவு செய்பவர்கள் மட்டும் அனுமதிக்கபடுவர். இதேபோல் டோக்கன் முறையில் அதிகாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை ஒவ்வொரு மணி நேரத்திற்கு 1, 500 நபர்கள் அனுமதிக்கப்படுவார்கள். கொரோனா தொற்று காரணமாக கூடுமான வரை ஆன்லைன் மூலம் பதிவு செய்து சாமியை தரிசனம் செய்திட வேண்டும். 

ஆன்லைன் மூலம் (http;\\namakkalnarasimhasw amianjaneyartemple.org\) என்ற வலைதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், சர்க்கரை நோய் உள்ளவர்கள் மற்றும் கர்ப்பிணிகள், 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் தரிசனத்திற்கு வருவதை தவிர்க்க வேண்டும். பக்தர்களின் உடல் வெப்பநிலை அறியும் தெர்மல் ஸ்கேனர் கொண்டு பரிசோதனை செய்த பின்னர் தான் கோவிலில் நுழைய அனுமதிக்கப்படுவார்கள். பாதுகாப்பு காரணமாக கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு குங்குமம், மஞ்சள், விபூதி, பூ உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட மாட்டாது. விழாவை பக்தர்கள் ஆன்லைனில் காணும் வகையில் வலைதளத்தில் ஒளிபரப்பு செய்யப்படும். இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
Tags:    

Similar News