ஆன்மிகம்
தல்லாகுளம் பெருமாள் கோவிலில் சப்பர முகூர்த்த விழா நடந்தபோது எடுத்தபடம்.

தல்லாகுளம் பெருமாள் கோவிலில் சப்பர முகூர்த்த விழா

Published On 2021-01-18 05:15 GMT   |   Update On 2021-01-18 05:15 GMT
மதுரை தல்லாகுளம் பெருமாள் கோவிலில் சப்பர முகூர்த்த விழா நடந்தது. இதில் ஆயிரம் பொன் சப்பரத்திற்கு வேண்டிய மூங்கில் சேகரிக்கும் பணி நடந்தது.
மதுரையில் நடைபெறும் சித்திரை திருவிழா உலக பிரசித்தி பெற்றது. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் திருக்கல்யாணம் முடிந்ததும் அதைத்தொடர்ந்து கள்ளழகர் தங்க குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் ஆண்டுதோறும் நடைபெறும். அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த விழாவில் பங்கேற்பார்கள். இதற்கிடையே வருகிற ஏப்ரல் மாதம் கள்ளழகர் கோவிலில் சித்திரை திருவிழா நடைபெற உள்ளது.

மேலும் 108 வைணவ தலங்களில் ஒன்றானதும், பிரசித்தி பெற்றதுமான அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் சித்திரை திருவிழா மிக முக்கியமானதாகும். இந்த திருவிழாவின் முன்னோட்ட நிகழ்ச்சியாக சப்பர முகூர்த்த விழா நேற்று காலை கள்ளழகர் கோவிலின் உபகோவிலான மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் கோவிலில் நடந்தது.

அப்போது கோவிலில் சப்பர முகூர்த்த விழா மேளதாளம் முழங்க தொடங்கியது. இதில் ஆயிரம் பொன் சப்பரத்திற்கு வேண்டிய மூங்கில் சேகரிக்கும் பணி நடந்தது. தொடர்ந்து பட்டர்களின் வேதமந்திரங்கள் முழங்க ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது.

மேலும் கள்ளழகர் கோவில், மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் மற்றும் கூடலழகர் கோவிலிலிருந்தும் பட்டர்கள் வந்து கலந்து கொண்டு சித்திரை திருவிழாவை சிறப்பாக நடத்துவது என கலந்து ஆலோசனை செய்தனர். இதில் கோவில் கண்காணிப்பாளர்கள், பணியாளர்களும் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி அனிதா மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

மதுரையை மன்னர்கள் ஆண்ட காலத்தில் நடந்த சித்திரை திருவிழாவில் பிரமாண்டமாக ஆயிரம் பொன் செலவில் 3 மாதங்கள் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களால் செய்யப்பட்ட சப்பரத்தில் கள்ளழகர் தங்க குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் எழுந்தருளுவார். ஆயிரம் பொன் செலவில் செய்யப்படுவதால் இதற்கு ‘ஆயிரம் பொன் சப்பரம்’ என்ற பெயர் வந்தது. ஆனால் தற்போது கள்ளழகர் வைகை ஆற்றில் சப்பரம் இல்லாமல் தங்க குதிரை வாகனத்திலேயே எழுந்தருள்கிறார். இருப்பினும் சம்பிரதாயமாக இன்றளவும் ஆயிரம் பொன் சப்பரம் செய்யும் சப்பர முகூர்த்தத்துடன் திருவிழா தொடங்குகிறது.
Tags:    

Similar News