செய்திகள்
20 பவுன் நகை மற்றும் 25 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட வீடு

பிரிண்டிங் நிறுவன உரிமையாளர் வீட்டில் 120 பவுன் நகை - ரூ.25 லட்சம் கொள்ளை

Published On 2021-04-05 22:19 GMT   |   Update On 2021-04-06 07:57 GMT
பிரிண்டிங் நிறுவன உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 120 பவுன் நகை மற்றும் ரூ.25 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்ற 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருப்பூர்:

சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியை சேர்ந்தவர் சபியுல்லா (வயது 54). இவர் திருப்பூரை அடுத்த கே.செட்டிபாளையம் மும்மூர்த்தி நகர் பகுதியில் கடந்த 19 ஆண்டுகளாக குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் மும்மூர்த்திநகர் அருகே குளிக்காட்டில் சொந்தமாக பிரிண்டிங் நிறுவனம் வைத்துள்ளார். மேலும் தமிழ்நாடு மாநில அமைப்பு கபடி கழக பொதுச் செயலாளராகவும் இருந்து வருகிறார்.

இந்த நிலையில், கடந்த 2-ந்தேதி வீட்டை பூட்டி விட்டு, சபியுல்லா தனது மனைவி ஷகிலா பேகம் (51) மற்றும் மகன் ஆஷிக் அகமது (18) ஆகியோருடன் ஒரு காரில் ஊட்டிக்கு சுற்றுலா சென்றார். தான் ஊட்டி செல்லும் விவரத்தை சபியுல்லா மும்மூர்த்திநகர் பகுதியில் குடியிருக்கும் தனது உறவினர் ஷியத்துல்லாவிடம் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் ஷியத்துல்லா நேற்று காலை சபியுல்லா வீட்டின் அருகே வந்துள்ளார். அப்போது சபியுல்லா வீ்ட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ஷியத்துல்லா, சுற்றுலா சென்ற சபியுல்லாவுக்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து சபியுல்லா உடனே ஊட்டியில் இருந்து காரில் வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு மற்றும் ஜன்னல் உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் பதற்றத்துடன் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறிக்கிடந்தன. வீட்டில் இருந்த 2 பீரோக்கள் உடைக்கப்பட்டு அவற்றில் இருந்த 120 பவுன் நகை மற்றும் ரூ.25 லட்சம் கொள்ளைபோயிருந்தது. இதை பார்த்து சபியுல்லா குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

மோட்டார்சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த 2 பேர் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருந்தது வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியின் மூலம் தெரியவந்துள்ளது. சம்பவம் குறித்து வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News