செய்திகள்
போராட்டம்

சேரம்பாடியில் ஆட்கொல்லி யானையை பிடிக்க கோரி பொதுமக்கள் போராட்டம்

Published On 2021-02-07 10:07 GMT   |   Update On 2021-02-07 10:07 GMT
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே உள்ள சேரம்பாடியில் ஆட்கொல்லி யானையை பிடிக்க கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊட்டி:

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே உள்ள சேரம்பாடி வனப்பகுதியில் சுற்றிதிரிந்த காட்டு யானை ஒன்று கடந்த டிசம்பர் மாத இறுதியில் ஊராட்சி கவுன்சிலர் உள்பட 3 பேரை அடித்து கொன்றது. அந்த யானையை மக்கள் கொம்பன் என பெயரிட்டு அழைத்தனர். இதையடுத்து ஆட்கொல்லி யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர். இதற்காக கும்கி யானைகளும் வரவழைக்கப்பட்டன. ஆனால் அந்த யானை அங்கிருந்து தப்பி கேரள வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது.

இதன் காரணமாக அச்சத்தில் இருந்த பொதுமக்கள் சற்று நிம்மதியடைந்தனர். இந்த நிலையில் கடந்த 4-ந் தேதி மீண்டும் கொம்பன் யானை சேரம்பாடி வனப் பகுதிக்குள் நுழைந்தது.

இதை கேள்விப்பட்ட அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்து யானையை உடனடியாக பிடிக்க வேண்டும் என வனத்துறையினரிடம் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து நேற்று காலை, கூடலூர் வன கோட்டத்தை சேர்ந்த வனத்துறையினர் மற்றும் கோவையை சேர்ந்த சிறப்பு குழுவினர், 3 டாக்டர்களை கொண்ட மருத்துவ குழுவினர் யானை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். மதியம் சப்பந்தோடு, குடியிருப்பையொட்டி யானை நிற்பதை கண்டுபிடித்த வனத்துறையினர் உடனடியாக மயக்க ஊசி செலுத்த மருத்துவர்களிடம் கேட்டு கொண்டனர்.

ஆனால் அதற்கு சற்று தாமதம் ஆனது. இதனால் வனத்துறையினருக்கும், டாக்டர்களுக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. யானை அங்கேயே நின்று வெகு நேரமாக மயக்க ஊசி செலுத்தி பிடிக்காததால் பொதுமக்கள் ஆத்திரம் அடைந்தனர்.

அவர்கள் வனத்துறையினரையும், மருத்துவ குழுவினரையும் கண்டித்து சேரம்பாடி சுங்கம் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறும்போது, இந்த யானை ஏற்கனவே 3 பேரை அடித்து கொன்றுள்ளது. மேலும் இந்த யானையால் யாருக்கும் அசம்பாவிதம் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக யானை உடனடியாக பிடிக்க வேண்டும் என்றோம். ஆனால் யானை இருக்கும் இடத்தை கண்டுபிடித்த பின்னரும் மயக்க ஊசி செலுத்தி பிடிக்காமல் அவர்களுக்குள் சண்டை போட்டு கொள்கின்றனர். எனவே அவர்களுக்கு இடையேயான சண்டையை மறந்து விரைந்து அந்த காட்டு யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.

Tags:    

Similar News