செய்திகள்
கோப்புப்படம்

செவ்வாய் கிரகத்தில் நாசாவின் ரோவர் சோதனை ஓட்டம் வெற்றி

Published On 2021-03-07 00:01 GMT   |   Update On 2021-03-07 00:01 GMT
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம், நாசா செவ்வாய் கிரகத்தில் ஆராய்ச்சி நடத்துவதற்காக பெர்செவரன்ஸ் என்ற ரோபோ ரோவரை அனுப்பியது.
லாஸ் ஏஞ்சல்ஸ்:

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம், நாசா செவ்வாய் கிரகத்தில் ஆராய்ச்சி நடத்துவதற்காக பெர்செவரன்ஸ் என்ற ரோபோ ரோவரை அனுப்பியது.

இந்த ரோவர், செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்ந்து இருக்கின்றனவா என்பது குறித்து ஆராய்வதுடன், அங்குள்ள பாறைகளை துளையிட்டு அதன் துகள்களை சேகரித்து பூமிக்கு அனுப்பி வைப்பதில் முக்கிய பங்காற்றும்.

இந்த ரோவர் கடந்த மாதம் 18-ந்தேதி செவ்வாயில் ஜெசிரோகிரேட்டர் என்ற பள்ளத்தில் தரை இறங்கியது. அது தரை இறங்கும் தருணத்தை காட்டும் வீடியோ வெளியாகி உலகை வியப்பில் ஆழ்த்தியது.

இந்த நிலையில், நாசாவின் ரோவர் தனது முதல் சோதனை ஓட்டத்தை செவ்வாயில் 4-ந்தேதியன்று வெற்றிகரமாக நடத்தி இருக்கிறது. செவ்வாய் நிலப்பரப்பில் 6.5 மீட்டர் தொலைவுக்கு இந்த ரோவர் சென்று இருக்கிறது.

இந்த சோதனை ஓட்டம் 33 நிமிடங்களுக்கு நீடித்தது என நாசா வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த ரோவர், தனது ஆய்வுப்பணிகளை தொடங்குவதற்கு முன்னதாக இது ஒரு முக்கிய மைல் கல்லாக பார்க்கப்படுகிறது.

இதுபற்றி நாசா கூறுகையில், “ரோவரில் உள்ள ஒவ்வொரு அமைப்பும், அதன் துணை அமைப்பும், உபகரணங்களும் செயல்படுவதை அளவீடு செய்வதற்கான வாய்ப்பாக இந்த சோதனை ஓட்டம் அமைந்துள்ளது” என கூறியது.

“மாற்று கிரகங்களில் சக்கரங்களுடனான வாகனங்கள் கால்பதிக்கும்போது, முதல் இயக்கத்தின் முக்கியத்துவத்தை அளவிடும் முதல் சில நிகழ்வுகள் உள்ளன. ரோவரின் டயர்களை உதைத்து பெர்செவரன்ஸ் ரோவரை ஒரு சுழலுக்காக வெளியேற்றுவதற்கான முதல் வாய்ப்பு இதுவாகும். ரோவரின் 6 சக்கரங்களும் சிறப்பாக இயங்குகின்றன. அறிவியல் எங்கு சென்றாலும் அது எங்களை அழைத்துச்செல்லும் திறன் கொண்டது” என்று நாசாவின் ஜெட் புரபல்ஷன் ஆய்வுக்கூட என்ஜினீயர் அனய்ஸ் ஜாரிபியன் தெரிவித்தார்.

நாசாவின் துணை திட்ட இயக்குனர் கேட்டி ஸ்டாக் மோர்கள் கருத்து தெரிவிக்கையில், “இது குறிப்பிடத்தக்க ஒரு தருணம் ஆகும். ரோவர் இன்னும் பல என்ஜினீயரிங் சோதனைகளை செய்யப்போகும் நிலையில், அது நகர்ந்து செல்லத்தொடங்கிய தருணத்தில், நம்மை செவ்வாய் கிரகத்தின் ஆய்வாளர்களாக கருதலாம்” என குறிப்பிட்டார்.
Tags:    

Similar News