செய்திகள்
ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் ஆம்புலன்ஸ் டிரைவர், உறவினர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய காட்சி.

ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்தின்போது குழந்தை திடீர் மரணம்

Published On 2021-02-20 13:36 GMT   |   Update On 2021-02-20 13:36 GMT
ஊட்டி அரசு மருத்துவமனையில் பிரசவத்தின்போது குழந்தை திடீரென இறந்தது. இதனால் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊட்டி:

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே இளித்தொரை இந்திரா நகரை சேர்ந்தவர் அருள்நாதன் (வயது 28). இவர் 108 ஆம்புலன்ஸ் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். அவரது மனைவி நாகராணி (25). நிறைமாத கர்ப்பிணியான நாகராணி, பிரசவத்துக்காக ஊட்டி அரசு தலைமை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை நாகராணிக்கு ஆண் குழந்தை பிறந்தது. அப்போது அந்த குழந்தை பிறக்கும்போதே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அருள்நாதன் மற்றும் உறவினர்கள் அறுவை சிகிச்சை செய்து பிரசவம் பார்க்குமாறு கூறியதாகவும், டாக்டர்கள், காலதாமதம் செய்ததால்தான் குழந்தை இறந்ததாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் அவர்கள் குழந்தையின் உடலை வாங்க மறுத்து அரசு ஆஸ்பத்திரி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த ஊட்டி நகர மேற்கு போலீசார் மற்றும் ஆஸ்பத்திரி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். அதன் பிறகு அருள்நாதன் நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-

எனது மனைவிக்கு வலி ஏற்படாததால் 2 நாட்களாக சுக பிரசவத்திற்காக காத்திருந்தோம். பின்னர் அறுவை சிகிச்சை செய்யுமாறு கூறினேன். அங்கு டாக்டர் இல்லாததால் செவிலியர் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு வரவழைத்தார்.

பின்னர் குழந்தையின் இதய துடிப்பு குறைந்து வருகிறது. உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறினார். அதன் பிறகு டாக்டர் எங்களிடம் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தார். குழந்தை இறந்ததற்கு காரணம் அஜாக்கிரதைதான். எனவே எனது குழந்தை இறந்ததற்கு காரணமாக இருந்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
Tags:    

Similar News