செய்திகள்
நகை கொள்ளை

புதுவை ரெட்டியார்பாளையத்தில் என்ஜினீயரிங் கல்லூரி பேராசிரியர் வீட்டில் ரூ.4 லட்சம் நகை திருட்டு

Published On 2020-01-10 09:48 GMT   |   Update On 2020-01-10 09:48 GMT
புதுவை ரெட்டியார்பாளையத்தில் என்ஜினீயரிங் கல்லூரி பேராசிரியர் வீட்டில் ரூ. 4 லட்சம் மதிப்புள்ள நகைகள் திருட்டு போனது. இந்த நகைகளை வீட்டு வேலைக்காரி திருடி சென்றாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

புதுச்சேரி:

புதுவை ரெட்டியார் பாளையம் சுதாகர்நகர் 3-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் பழனிராஜா. இவர் புதுவை அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி மேரிஹெரித்தா (வயது36). இவர் புதுவையில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு உறவினரின் திருமண நிகழ்ச்சிக்கு செல்ல வங்கி லாக்கரில் வைக்கப்பட்டிருந்த நகைகளை மேரிஹெரித்தா வீட்டுக்கு எடுத்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்த விலை உயர்ந்த பிளாட்டினம் கம்மலை காணவில்லை. அந்த நகை காணாதது முதல் வீட்டு வேலை செய்ய வந்த லாம்பார்ட் சரவணன்நகரை சேர்ந்த செல்வியும் வீட்டு வேலைக்கு வரவில்லை.

பிளாட்டினம் கம்மல் மாயமானது குறித்து வீட்டு வேலைக்காரி செல்வியை விசாரிக்க போன் செய்த போது அவர் போனை எடுத்து பேசவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த மேரிஹெரித்தா வங்கி லாக்கரில் இருந்து எடுத்து வந்த நகைகளை சரிபார்க்க பீரோ சாவியை தேடினார். ஆனால் வழக்கமாக வைக்கப்பட்டு இருந்த இடத்தில் பீரோ சாவி இல்லை. பின்னர் பீரோ சாவியை தேடிய போது சாவி வாஷ்பே‌ஷன் பின்னால் மறைத்து வைக்கப்பட்டு இருப்பதை கண்டார்.

இதையடுத்து சாவியை எடுத்து பீரோவை திறந்து பார்த்த போது நகை பெட்டியில் வைத்திருந்த 15 பவுன் நகைகள் திருட்டு போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். திருட்டு போன நகைகளின் மதிப்பு ரூ. 4 லட்சமாகும்.

இதுகுறித்து மேரி ஹெரித்தா ரெட்டியார் பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரில் நகை திருட்டில் வீட்டு வேலைக்காரி செல்வி மீது சந்தேகம் இருப்பதாக கூறி உள்ளார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் வீட்டு வேலைக்காரி செல்வியை பிடித்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.

Tags:    

Similar News