செய்திகள்
நேற்று இரவு கொட்டித் தீர்த்த மழையால் சாலையில் ஆறுபோல் ஓடிய நீரில் வாகனங்கள் தத்தளித்த படி சென்ற காட்சி.

திருச்சி, மணப்பாறை, சமயபுரத்தில் இடியுடன் பலத்த மழை

Published On 2020-10-18 13:36 GMT   |   Update On 2020-10-18 13:36 GMT
திருச்சி, மணப்பாறை, சமயபுரத்தில் இடியுடன் பலத்த மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
திருச்சி:

ஐப்பசி மாதம் என்றால் அடை மழை பெய்யும் என்பார்கள். ஐப்பசி மாதப்பிறப்பான நேற்று பகலில் வெயில் வழக்கம் போல் அதிகமாக காணப்பட்டது. ஆனால் இரவு 9 மணி அளவில் இடியுடன் பலத்த மழை பெய்ய தொடங்கியது. திருச்சி மாநகரத்துக்குட்பட்ட சத்திரம் பஸ்நிலையம், மெயின்கார்டுகேட், காந்திமார்க்கெட், பாலக்கரை, கன்டோண்மெண்ட், கருமண்டபம் உள்பட பல பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கியது.

இதேபோல் திருச்சி புறநகர் பகுதிகளிலும் இடியுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. சாலைகளின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். திருச்சியில் கடந்த சில நாட்களாக மழை பெய்யாத நிலையில் நேற்று இரவு பெய்த திடீர் மழையால் பகல்நேர வெயில் தாக்கத்தின் புழுக்கம் குறைந்து, குளிர்ச்சியான சூழல் நிலவியது.

மணப்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிளான துவரங்குறிச்சி, வளநாடு, கோவில்பட்டி, பன்னாங்கொம்பு, வையம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக பலத்த மழை பெய்தது. சுமார் ஒன்றறை மணிநேரத்திற்கும் மேலாக பெய்த பலத்த மழையால் நீர்நிலைகளில் தண்ணீர் தேங்கியதால் நிலத்தடி நீர்மட்டம் உயரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். மழையால் குளிர்ந்த நிலை உருவானதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

சமயபுரம், மண்ணச்சநல்லூர், திருப்பைஞ்சீலி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் பெய்த காரணமாக சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. சமயபுரம் பகுதியில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளங்களில் மழைநீர் தேங்கி நின்றதால் இருசக்கர வாகன ஓட்டிகள் பெரும் அவதி அடைந்தனர்.

மாரியம்மன் கோவிலுக்கு வெளியூர்களிலிருந்து வந்த பக்தர்களும் இதனால் சிரமம் அடைந்தனர். மண்ணச்சநல்லூர் சிவன் கோவில் அருகே உள்ள அக்ரஹாரம் பகுதியில் மழைநீர் பெருமளவு தேங்கியதால் அவ்வழியே சென்ற வாகனங்கள் ஊர்ந்து சென்றன.
Tags:    

Similar News