ஆன்மிகம்
குட்டி குடித்தல் நிகழ்ச்சியை காண குவிந்திருந்த பக்தர்கள் கூட்டம். (உள்படம்-தேரில் எழுந்தருளிய குழுமாயி அம்மன்)

குழுமாயி அம்மன் கோவிலில் குட்டி குடித்தல் நிகழ்ச்சி

Published On 2021-03-05 06:30 GMT   |   Update On 2021-03-05 06:30 GMT
குழுமாயி அம்மன் கோவில் திருவிழாவையொட்டி குட்டி குடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது ஏராளமான ஆட்டுக்குட்டிகளின் ரத்தத்தை மருளாளி உறிஞ்சி குடித்தார்.
சோழ மன்னர்களின் குலதெய்வமும் திருச்சி மாநகர எல்லை காவல் தெய்வமுமான புத்தூர் குழுமாயி அம்மன் கோவில் மாசி தேர்த்திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த ஆண்டு தேர் திருவிழா கடந்த 2-ந் தேதி மறு காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து உய்யகொண்டான் வாய்க்கால் கரையில் இருந்து குழுமாயி அம்மனை பக்தர்கள் மேளதாளம் முழங்க புத்தூர் மந்தைக்கு அழைத்து வந்தனர். நேற்று முன்தினம் காலை சுத்த பூஜை நடைபெற்றது. பின்னர் ஓலைப்பிடாரி அலங்காரத்தில் எழுந்தருளிய குழுமாயி அம்மன் முக்கிய வீதிகள் வழியாக தேரில் வலம் வந்தார்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குட்டி குடித்தல் நேற்று காலை நடைபெற்றது. புத்தூர் மந்தையில் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளிய குழுமாயி அம்மனுக்கு அந்த பகுதியை சேர்ந்த பக்தர்கள் திரளான அளவில் வந்து தேங்காய், பழம் படைத்தும், மா விளக்கு பூஜைகள் நடத்தியும், கற்பூரம் ஏற்றியும் வழிபாடு செய்தனர்.

நேரம் செல்ல, செல்ல பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாக இருந்தது. இந்நிலையில் காலை 11 மணி அளவில் அம்மனின் அருள் பெற்ற மருளாளியை (சாமி ஆடுபவர்) கொம்பு வாத்தியங்கள் முழங்க விழாக்குழுவினர் அழைத்து வந்தனர். 4 பக்தர்கள் அவரை தோள்மேல் அமர வைத்து தூக்கி வைத்துக்கொண்டு மைதானத்திற்கு வந்தனர். அப்போது அங்கு ஏராளமான ஆட்டுக்குட்டிகளுடன் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். முதலில் மாவட்ட நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்ட ஆட்டுக்குட்டியின் ரத்தத்தை மருளாளி உறிஞ்சி குடித்தார். அதனைத்தொடர்ந்து பக்தர்கள் நேர்த்திக்கடனாக கொண்டு வந்த ஆட்டுக்குட்டிகள் வரிசையாக பலியிடப்பட்டன. ஆட்டுக்குட்டிகளின் ரத்தத்தை உறிஞ்சிக் குடித்த மருளாளி பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார். காலையில் தொடங்கிய இந்த நிகழ்ச்சி மாலை வரை நடைபெற்றது.

அதன்பின்னர் புத்தூர் அக்ரஹாரம், முத்துராஜா தெரு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக தேர் வலம் வந்தது. திருவிழாவையொட்டி புத்தூர் பகுதி முழுவதும் நேற்று விழாக்கோலம் பூண்டிருந்தது. மக்கள் வெள்ளத்தில் குழுமாயி அம்மன் தேர் அசைந்து வந்தது கண் கொள்ளா காட்சியாக இருந்தது. இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவையொட்டி அந்த பகுதியில் ஏராளமான தரைக்கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. ராட்டினம் உள்பட பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. பாதுகாப்பு ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் சரக உதவி போலீஸ் கமிஷனர் சுந்தரமூர்த்தி தலைமையில் போலீசார் செய்திருந்தனர்.
Tags:    

Similar News