செய்திகள்
புதுச்சேரி மாவட்ட கலெக்டர் அருண்

டாக்டரின் பரிந்துரை சீட்டுகளுக்கு மட்டுமே மருந்து, மாத்திரை- கலெக்டர் அறிவுறுத்தல்

Published On 2020-10-23 09:05 GMT   |   Update On 2020-10-23 09:05 GMT
டாக்டர் பரிந்துரை சீட்டுகளுடன் வந்தால் மட்டுமே மருந்து, மாத்திரைகள் வழங்க வேண்டும் என்று மருந்து கடைகளுக்கு கலெக்டர் அருண் அறிவுறுத்தி உள்ளார்.
புதுச்சேரி:

புதுச்சேரி மாவட்ட கலெக்டர் அருண் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பொதுமக்கள் யாருக்காவது கொரோனா அறிகுறி இருந்தால் உடனடியாக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அல்லது கொரோனா சிகிச்சை மையங்களில் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அவ்வாறு பரிசோதனை செய்யாமலும், மருத்துவர்களை சந்திக்காமலும் நேராக மருந்துக் கடைகளுக்கு சென்று சுயமாக மருந்து, மாத்திரைகள் வாங்கிச் சாப்பிட்டால் அது கொரோனா பரவலை மேலும் அதிகரிக்கக் கூடும்.

எனவே பேரிடர் மேலாண்மை சட்டத்தின்படி கொரோனா தொற்று பரவுவதை தடுக்க மருந்துக் கடைகளுக்கு ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இருமல், காய்ச்சல், சளி, சுவாச பிரச்சினையுடன் வரும் பொதுமக்களுக்கு சுயமாக மருந்து வழங்கக் கூடாது. டாக்டர்கள் பரிந்துரைத்த மருந்து சீட்டுகளுடன் வந்தால் மட்டுமே மருந்து, மாத்திரைகள் வினியோகிக்க வேண்டும்.

அனைத்து மருந்துக்கடைகள், கிளினிக்குகளில் அருகில் உள்ள கொரோனா பரிசோதனை மையங்கள் குறித்த விவரங்களை பொதுமக்களின் பார்வையில் தெரியும்படி எழுதி வைக்க வேண்டும். கொரோனா விழிப்புணர்வு பேனர்கள் வைக்கப்பட வேண்டும். மருந்து வாங்குபவர்களின் பெயர், விவரங்களை சேகரிப்பதும் அவசியம். புதுச்சேரியில் உள்ள மருந்து கட்டுப்பாட்டு துறை இதனை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News