செய்திகள்
முத்தூர் பகுதியில் கோடை வெயிலின் தாக்கத்தால் ஆண்டவர் குளத்தில் தண்ணீர் வேகமாக குறைகிறது.

கோடை வெயிலால் வறண்டு வரும் முத்தூர் குளம்

Published On 2021-06-02 06:41 GMT   |   Update On 2021-06-02 06:41 GMT
கோடை வெயில் தாக்கத்தால் முத்தூர் குளம் வறண்டு வருவது விவசாயிகள்- பொதுமக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர்:

திருப்பூர் மாவட்டம் முத்தூர் அருகே உள்ள வேலம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட பெரியகாங்கயம்பாளையத்தில் ஆண்டவர் நகர் குளம் உள்ளது. இந்த குளத்திற்கு  மழை காலங்கள் மற்றும் கீழ்பவானி பாசன கால்வாய்களில் தண்ணீர் செல்லும் நேரங்களில் வெளியேறும் அதிக உபரி நீர் காரணமாக அதிக அளவில் நீர் வரத்து இருக்கும். இந்த ஆண்டவர் நகர் குளம் நிரம்பி அதிக அளவில் நீர் மட்டம் உயர்ந்து இருக்கும்போது பெரிய காங்கயம்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளான ஆண்டவர் நகர், சின்ன காங்கயம்பாளையம், ஆலாம்பாளையம், பாறையூர், சத்யா நகர், பொய்யேரிமேடு உட்பட பல்வேறு கிராம பகுதிகளில் கிணறுகள், ஆழ்குழாய் கிணறுகளின் நீர்மட்டம் அதிக அளவு உயர்ந்து காணப்படும்.

இதனால் இந்த குளத்தை சுற்றியுள்ள கிராம பகுதி பொதுமக்கள் மற்றும் கால்நடைகளின் குடிநீர் ஆதாரம் மேம்படுத்தப்பட்டு பாதுகாக்கப்படும்.மேலும் சுற்றுவட்டார விவசாயிகளின் மஞ்சள், கரும்பு, மா, வாழை, சப்போட்டா, கொய்யா உட்பட நீண்டகால பயிர்கள், மரங்களும் ஓரளவு நீர் பிடிப்பை தாங்கி நிற்கும்.மேலும் இப்பகுதிகளில் விவசாய வேளாண் பணிகளும் தொய்வின்றி நடைபெறும்.

இப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரமாக உள்ள ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி பாசன பகுதிகளுக்கு கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை நஞ்சை சம்பா நெல் சாகுபடிக்கு தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.  இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை எண்ணை  வித்து பயிர் சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.

மேலும் கடந்த ஆண்டு ஓரளவு பெய்த பலத்த மழையின் காரணமாகவும், கீழ்பவானி பாசன கால்வாயில் வெளியேறிய உபரி நீரினாலும் இந்த குளத்திற்கு நீர்வரத்து ஏற்பட்டது. இதனால் இந்த ஆண்டவர்நகர் குளம் கடந்த 5 மாத காலமாக நிரம்பி கடல் போல் காட்சியளித்தது.

இந்தநிலையில் கடந்த 2 மாத காலமாக சுட்டெரிக்கும் வெயிலால் ஆண்டவர் நகர் குளத்தில் தேங்கி உள்ள நீரின் ஈரப்பதம் அதிக அளவில் உறிஞ்சப்பட்டு மேலே ஆவியாக செல்கிறது. இதனால் குளத்தின்நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. கோடை வெயிலின் தாக்கம் அதிக அளவில் ஏற்படும் போது இந்த குளத்தின் நீர்மட்டம் வெகு வேகமாக சரிந்து முற்றிலும் நீரின்றி காய்ந்து வறண்டு விடும் அபாய சூழல் ஏற்பட்டுள்ளது. 
Tags:    

Similar News