ஆன்மிகம்
முன்னுதித்த நங்கை அம்மன் திருக்கோவில்

முப்பெருந்தேவியர்களுக்கு அருளிய முன்னுதித்த நங்கை அம்மன் திருக்கோவில்

Published On 2020-10-21 01:28 GMT   |   Update On 2020-10-21 01:28 GMT
கன்னியாகுமரி அன்னையைப் போலவே, மகிஷாசூரனை வதம் செய்து அதே கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் அன்னை ஆதிபராசக்தி, ‘முன்னுதித்த நங்கை அம்மன்’ எனும் திருநாமத்தில் திருக்கோவில் கொண்டிருக்கிறாள். இந்த ஆலயத்தைப் பற்றி இங்கே பார்க்கலாம்..
அன்னை பராசக்தி கன்னியாக, குமரியாக நித்தமும் சிவபெருமானை நினைத்து தவம் செய்யும் இடம் கன்னியாகுமரி. இங்கு அன்னை பகவதி அம்மன் என்ற பெயரில் கோவில் கொண்டிருக்கிறாள். பாணாசுரன் என்ற அசுரன், தனக்கு இறப்பென்று ஒன்று இருந்தால் அது கன்னிப்பெண் ஒருத்தியால்தான் வர வேண்டும் என்ற வரத்தைப் பெற்றிருந்தான். எனவேதான் அன்னை பராசக்தி, கன்னிப்பெண்ணாக, குமரியாக வந்து பாணாசுரனை வதம் செய்தாள். பின்னர் தென்குமரியில் ஈசனை துதித்து தவக்கோலம் பூண்டாள். இங்கு அன்னை பகவதி தம்மை வேண்டி நிற்கும் அடியவர்களின் வேண்டுதல்களை ஈசனிடம் சேர்ப்பித்து சிவசக்தியாய் வரம் தந்தருளுகிறாள்.

இந்த கன்னியாகுமரி அன்னையைப் போலவே, மகிஷாசூரனை வதம் செய்து அதே கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் அன்னை ஆதிபராசக்தி, ‘முன்னுதித்த நங்கை அம்மன்’ எனும் திருநாமத்தில் திருக்கோவில் கொண்டிருக்கிறாள். இந்த ஆலயத்தைப் பற்றி இங்கே பார்க்கலாம்..

ரம்பன் எனும் அசுரன் அக்னி பகவானை வழிபட்டு, நினைத்த உருவை நொடியில் எடுக்கும் வரம் பெற்றிருந்தான். ஒருநாள் காட்டில் அழகிய பெண் எருமையைக் கண்டான். அந்தப் பெண் எருமை, தன் முற்பிறப்பில் சியாமளா என்ற அழகிய ராஜகுமாரியாக இருந்து சாபத்தினால் எருமையானது. ரம்பனுக்கு நினைத்தபோது தன்னை மாற்றிக்கொள்ள முடியும் என்பதால், அவன் ஆண் எருமையாக மாறி அந்தப் பெண் எருமையுடன் மகிழ்ந்து இருந்தான். அந்த உறவால் எருமைத் தலையுடன் மகிஷாசுரன் பிறந்தான். அவன் பிரம்மாவை நோக்கி கடுந்தவம் செய்தான். அந்த தவத்தின் மூலமாக ‘பெண்ணால் மட்டுமே தனக்கு மரணம் வேண்டும்’ என வரம் பெற்றான்.

அந்த ஆணவத்தின் காரணமாக பூலோகம் முழுவதையும் வென்று, தேவலோகத்தையும் கைப்பற்றினான். இதையடுத்து மகிஷா சுரனை அழிக்க சிவபெருமான், தம்மில் இருந்து கருநிறத்தில் ஒரு ஒளியை தோற்றுவித்தார்.

அதனுள் விஷ்ணுவிடமிருந்து தோன்றிய வெண்மை நிற ஒளி சென்று கலந்தது. கூடவே பிரம்மாவிடமிருந்து தோன்றிய சிகப்பு நிற ஒளியும் ஒன்றாகி கலந்தன. அந்த ஒளிப்பிழம்புகளில் இருந்து அன்னை பராசக்தி உதித்தாள்.

பின்னர் மும்மூர்த்திகளான சிவன், பிரம்மா, விஷ்ணு மற்றும் தேவர்கள் வழங்கிய ஆயுதங் களை கொண்டு மகிஷாசுரனை பராசத்தி வதம் செய்தாள்.

வெற்றிக்களிப்பில் அன்னை தெற்கு நோக்கி வந்து ஆனந்தமாய் நிலை கொண்ட திருத்தலமே, சுசீந்திரம். இங்கிருந்த அன்னை பராசக்தியை, தேவகன்னியர்கள் 300 பேர் வேள்வி செய்து வழிபட்டனர். அப்போது அவர்கள் முன்பாக உதித்து நின்று திருக்காட்சி அளித்தாள், அன்னை. இதனால் அவள் ‘முன்னுதித்த நங்கை’ என்று அழைக்கப்பட்டாள்.

முன்பு ஒரு முறை சுசீந்திரம் பகுதியில் ஆசிரமம் அமைத்த அத்ரி முனிவர், தனது மனைவி அனுசூயாதேவியுடன் அங்கு வசித்து வந்தார். அனுசூயா தேவியின் பொருட்டு மும்மூர்த்திகளும் குழந்தைகளாய் அவதரித்தனர். அவர்களுக்கு பாலூட்டி, தொட்டிலில் இட்டு சீராட்டினாள் அனுசூயாதேவி. மும்மூர்த்திகளையும் தேடி சுசீந்திரம் வந்தனர், மும்பெரும் தேவிகளான பார்வதி, லட்சுமி, சரஸ்வதி மூவரும்.

ஆனால் மும்மூர்த்திகளும் குழந்தைகளாய் மாறியதால், தேவியர்களால் அவர்களை அடையாளம் காண முடியவில்லை. அப்போது நாரத முனிவர் வழிகாட்ட, மூன்று தேவியர்களும் அருகில் இருந்த முன்னுதித்த நங்கை அம்மன் ஆலயத்தின் முன்புறம் உள்ள தீர்த்தக் குளத்தில் நீராடி, ஒரு மண்டலம் நோன்பு இருந்து, முன்னுதித்த நங்கை அம்மனை வழிபட்டு வந்தனர். அப்போது அன்னை ஆதிபராசக்தி, முப்பெரும் தேவியரின் முன் உதித்து அருள்பாலித்ததோடு, குழந்தைகளால் இருந்த மும்மூர்த்திகளையும் அடையாளம் காட்டினாள்.

51 சக்தி பீடங்களில் இத்தலம் அம்பிகையின் மேல் பல் வரிசை விழுந்த பிருகு பீடமாக போற்றப்படுகிறது. இதனை ‘சுசி பீடம்’ என்றும் கூறுகிறார்கள். இத்தல அம்பிகையை ‘நாராயணி’ என்றும், ‘அகோர தேவி’ என்றும் போற்றுகிறார்கள். ஆலயத்தில் சுமுகியும், சுந்தரியும் துவார பாலகிகளாக அருள்கிறார்கள். கருவறையில் முன்னுதித்த நங்கை அம்மன், பத்து திருக்கரங் களுடன் சூலம், கட்கம், கதை, கேடயம் தாங்கி, அபய வரத முத்திரைகளுடன் ஒரு காலை மடக்கி, இன்னொரு காலின் கீழ் மகிஷன் இருக்க சூலாயுதத்துடன் திருக்காட்சி தருகிறாள். நாகத்தை கச்சாகவும், காதில் ஒரு அசுரனை குண்டலமாகவும் தொங்கவிட்டு எழிலார்ந்த வீர கோலத்தில் அருள்கிறாள்.

இத்தல முன்னுதித்த நங்கை அம்மன் திருமேனி, கடுசர்க்கரை யோக மருந்தால் ஆனதாம். கடுசர்க்கரை யோகமருந்து என்பது செம்மண், குந்தரிக்கம், சர்க்கரை, கொம்பரக்கு, செஞ்சயம், பசு நெய், எள் எண்ணெய் மற்றும் பலவித மூலிகைச்சாறு ஆகிய எட்டுப் பொருட்களால் ஆனது என்கிறார்கள். எனவே இங்கு அம்மனுக்கு அபிஷேகம் இல்லை. மாறாக அம்பாள் முன் உள்ள மகாமேரு ஸ்ரீ சக்கரத்தை, பத்ரகாளியாக ஆவாகனம் செய்து அதற்கே அபிஷேகம் நடக்கிறது. அம்பாளின் கருவறை முகப்பில் விநாயகரும், வீரபத்திரரும் எழுந்தருளி உள்ளனர். பிரகாரத்தில் சிவன், பார்வதி, மோகினி, நாக கன்னி, பஞ்ச கன்னிகள், பூதநாதர், வேதாளம், வன்னியர், வன்னிச்சி, பைரவர், சாஸ்தா சன்னிதிகளும் உள்ளன. இத்தல பைரவர் ‘சம்ஹார பைரவர்’ ஆவார். விஜயதசமி நாளில் இங்கு குழந்தைகளுக்கு வித்யாரம்பம் என்று அழைக்கப்படும் பாலபாட பூஜைகளும் நடைபெறுகின்றன.

அமைவிடம்

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி திருக்கோவில் தெப்பக்குளக்கரையின் வடக்கில் முன்னுதித்த நங்கை அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் இருந்து 4 கிலோமீட்டர் தூரத்தில் கன்னியாகுமரி செல்லும் வழிப்பாதையில் சுசீந்திரம் இருக்கிறது.
Tags:    

Similar News