ஆன்மிகம்
அம்பாளை நோக்கி கோவில் யானை ராமலட்சுமி வணங்கிய காட்சி.சிறப்பு அலங்காரத்தில் பர்வதவர்த்தினி அம்பாள்.

ராமேசுவரம் கோவிலில் அம்பாள் தேரோட்டம் ரத்து

Published On 2021-08-10 07:04 GMT   |   Update On 2021-08-10 07:04 GMT
கொரோனா பரவல் கட்டுப்பாடு காரணமாக ராமேசுவரம் கோவிலில் அம்பாள் தேரோட்டம் ரத்து செய்யப்பட்டு 3-ம் பிரகாரத்தில் தங்க தேரோட்டம் நடந்தது.
ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் இந்த ஆண்டின் ஆடி திருக்கல்யாண திருவிழா கடந்த ஆகஸ்டு 1-ந் தேதி அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. தமிழகத்தில் கொரோனாபரவல் அதிகரித்து வருவதன் எதிரொலியாக அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் கூடும் வகையில் எந்த ஒரு திருவிழாக்களையும் நடத்தக்கூடாது என அரசால் தெரிவிக்கப்பட்டுஉள்ளது. ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் வருகிற 12-ந் தேதி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் நடந்து வரும் ஆடி திருக்கல்யாண திருவிழாவின் 9-வது நாளான நேற்று அம்பாள் தேரோட்டம் கோவில் ரதவீதியை சுற்றி நடத்த வேண்டும். ஆனால் கொரோனா பரவல் கட்டுப்பாடு காரணமாக நேற்று ராமேசுவரம் கோவிலில் அம்பாள் தேரோட்டம் ரத்து செய்யப்பட்டது.

அதற்கு பதிலாக கோவிலின் 3-ம் பிரகாரத்தில் தங்கத் தேரோட்டம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட பர்வதவர்த்தினி அம்பாள் மின்விளக்கு களுடன் கூடிய தங்க தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து கோவில் இணை ஆணையர் பழனி குமார் விநாயகர் மற்றும் முருகப்பெருமான் 2 சிறிய தேர்களையும் முதலாவதாக தொடங்கிவைத்து பின்னர் தங்க தேரையும் தொடங்கிவைத்தார்.

தொடர்ந்து விநாயகர், முருகப்பெருமான், அம்பாள் 3 தேர்களும் 3-ம் பிரகாரத்தில் ஒரு முறை சுற்றி தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. தேரோட்ட நிகழ்ச்சியில் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. திருக்கோவில் பணியாளர்கள் மற்றும் சீர்பாத பணியாளர்கள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர். தேரோட்ட நிகழ்ச்சியில் கோவிலின் சூப்பிரண்டு சுப்பிரமணியன், பேஷ்கார் கமலநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திருவிழாவின் 11-வது நாள் நிகழ்ச்சியாக ராமதீர்த்த பகுதியில் உள்ள தபசு மண்டக படியில் வைத்து சாமி அம்பாள் மாலை மாற்றுதல் நடைபெறுவது வழக்கம். ஆனால் கொரோனா பரவல் தடுப்புகட்டுப்பாடு காரணமாக இந்த ஆண்டு தபசு மண்டகப்படியில் நடைபெற இருந்த சாமி- அம்பாள் மாலை மாற்றும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு உள்ளது.

அதற்கு பதிலாக கோவில் உள்ளேயே வைத்து மாலை மாற்றும் நிகழ்ச்சி நடத்தப்படும் என்றும் திருக்கோவில் நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டு உள்ளது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 12-வது நாளான 12-ந் தேதி இரவு 7 மணி முதல் 8 மணிக்குள் சாமி-அம்பாள் திருக்கல்யாண நிகழ்ச்சியும் திருக்கல்யாண மண்டபத்தில் நடைபெறுகிறது.

திருக்கல்யாண நிகழ்ச்சியை காணவும் பக்தர்கள் யாருக்கும் அனுமதி இல்லை என திருக் கோவில் நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆடித்திருக்கல்யாண திருவிழாவின் கடைசி நாள் நிகழ்ச்சியாக சாமி-அம்பாள் கெந்தமாதன பர்வதம் மண்டகப்படிக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும் இந்த முறை ரத்து செய்யப்படுவதாகவும் திருக்கோவில் நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News