செய்திகள்
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

சசிகலாவை அ.தி.மு.க.வில் சேர்ப்பது குறித்து இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். முடிவு செய்வார்கள்- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

Published On 2019-10-17 05:25 GMT   |   Update On 2019-10-17 05:25 GMT
சசிகலா சிறையில் இருந்து வெளிவரும் பட்சத்தில் அ.தி.மு.க.வில் இணைந்து பணியாற்றுவது குறித்து தமிழக முதல்வரும். துணை முதல்வரும் தான் முடிவு செய்வார்கள் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.
களக்காடு:

நாங்குநேரி அ.தி.மு.க. வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணனுக்கு களக்காடு ஒன்றிய பகுதிகளில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வாக்கு சேகரித்து வருகின்றார். களக்காடு ஒன்றியம் மீனவன்குளம் கிராமத்தில் அமைச்சர் கொட்டும் மழையில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

நாங்குநேரி பகுதிகளில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரண்டு நாட்களாக வாக்கு சேகரித்தார். அதன்பிறகு நாங்குநேரி தொகுதியில் மிகப்பெரிய மாற்றங்கள் எழுந்துள்ளது. இதேபோன்று தான் விக்கிரவாண்டி தொகுதியிலும் அ.தி.மு.க.வுக்கு சாதகமான சூழ்நிலை உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் மாபெரும் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்கள். தொடர்ந்து தமிழக துணை முதல்வர் பன்னீர்செல்வம் வாக்கு சேகரிக்கிறார்.

ராஜீவ்காந்தி படுகொலை குறித்து சீமான் கூறிய கருத்துக்கள் மிகவும் கண்டிக்கத்தக்கது. நாவை அடக்கி சீமான் பேச கற்றுக்கொள்ள வேண்டும். ஜெயலலிதா மறைவிற்கு பிறகு சட்டமன்ற உறுப்பினர்களால் தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். 2021-ல் நடைபெறும் பொதுத்தேர்தலிலும் எடப்பாடி பழனிசாமிதான் தமிழக முதல்வர் என்று கூறிதான் நாங்கள் ஓட்டு கேட்டு வருகிறோம். தேர்தலுக்கு முன்பு அமைச்சர்கள் ராஜினாமா செய்ய வேண்டுமென்று ஸ்டாலின் ஒரு நப்பாசையில் கூறி வருகின்றார்.

அ.தி.மு.க. அரசு மீது பொதுமக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு ஏற்பட்டுள்ளது. எந்த கிராமத்திலும் அமைச்சர்களுக்கு எதிர்ப்பு என்பதே கிடையாது. இதை ஸ்டாலின் புரிந்துகொள்ள வேண்டும். அ.தி.மு.க.வில் குழப்பத்தை விளைவித்து மோதலை உருவாக்க வேண்டும் என்ற ஸ்டாலின் கனவு ஒரு காலமும் நடக்காது.

சசிகலா சிறையில் இருந்து வெளிவரும் பட்சத்தில் அ.தி.மு.க.வில் இணைந்து பணியாற்றுவது குறித்து தமிழக முதல்வரும். துணை முதல்வரும் தான் முடிவு செய்வார்கள். அ.தி.மு.க. தலைமை எடுக்கும் முடிவுகளுக்கு நான் கட்டுப்படுவேன். அ.தி.மு.க., இரட்டை இலை எங்கு இருக்கின்றதோ அங்குதான் நான் உட்பட அ.தி.மு.க. தொண்டர்கள் இருப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News