தொழில்நுட்பம்
அமேசான்

இனி இந்த தொழில்நுட்பத்தை காவல் துறை பயன்படுத்த கூடாது - அமேசான் அதிரடி

Published On 2020-06-12 09:10 GMT   |   Update On 2020-06-12 09:10 GMT
இனி இந்த தொழில்நுட்பத்தை காவல் துறை பயன்படுத்த கூடாது என அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமேசான் நிறுவனம், முக அங்கீகார தொழில்நுட்பத்தை மென்பொருள் வடிவத்தில் அறிமுகம் செய்து பல்வேறு நிறுவனங்களுக்கு வழங்கி வருகிறது. ஆனால் இந்த தொழில்நுட்பம், இன ரீதியில் பாரபட்சமாக செயல்படுவதற்கு வழி வகுத்து விடும் என்று சிவில் உரிமை ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

குறிப்பாக, இந்த முக அங்கீகார தொழில்நுட்பமானது, வெள்ளை இன மக்களின் முகங்களை விட கருப்பு இன மக்கள் மற்றும் சிறுபான்மையினரின் முகங்களை தவறாக அடையாளம் காண வாய்ப்பு உள்ளது என்று விமர்சனங்கள் எழுந்து வந்தன.

இந்த நிலையில் மினியாபொலிஸ் நகரில் ஜார்ஜ் பிளாய்ட் என்ற கருப்பு இனத்தவர், கடந்த 25-ந் தேதி வெள்ளை இன போலீஸ் பிடியில் சிக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம், அமெரிக்கா முழுவதும் பெரும் கலவரத்துக்கு வழிவகுத்தது.

எனவே அமேசான், தனது முக அங்கீகார தொழில் நுட்ப மென்பொருளை போலீசார் ஒரு வருடம் பயன்படுத்துவதற்கு அதிரடியாக தடை விதித்துள்ளது.



இதுபற்றி அமேசான் குறிப்பிடுகையில், “முக அங்கீகார தொழில்நுட்பத்தின் நெறிமுறை பயன்பாட்டை நிர்வகிப்பதற்கு அரசாங்கங்கள் வலுவான விதிமுறைகளை வகுத்து அளிக்க வேண்டும் என்று நாங்கள் வாதிட்டு வந்தோம். சமீபத்திய நாட்களில் இந்த சவாலை ஏற்பதற்கு நாடாளுமன்றம் தயாராக இருப்பதாக தெரிகிறது. எனவே ஒரு வருட தடைக்காலம், பொருத்தமான விதிகளை அமல்படுத்துவதற்கு நாடாளுமன்றத்துக்கு போதுமான அவகாசத்தை தரும் என்று நாங்கள் நம்புகிறோம். தேவைப்பட்டால் இதில் நாங்கள் உதவ தயாராக இருக்கிறோம்” என தெரிவித்து இருக்கிறது.

அமேசானின் மென்பொருள், ‘ஏ.ஐ.’ என்று அழைக்கப்படுகிற செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி ஒரு படத்தை மிக விரைவாக ஒப்பிட்டு பார்க்க உதவும். உதாரணமாக, ஒரு அதிகாரியின் செல்போன் கேமராவில் எடுக்கப்பட்ட படங்களை, ஆயிரக்கணக்கான புகைப்படங்களை வைத்திருக்கக்கூடிய போலீஸ் தரவு தளங்களில் வைத்திருக்கும் ‘மக்‌ஷாட்’களுடன் பொருத்திப்பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வார தொடக்கத்தில் ஐ.பி.எம். நிறுவனமும், தனது முக அங்கீகார மென்பொருளை வெகுஜன கண்காணிப்பு அல்லது இன சுய விவரத்துக்காக வழங்குவதை நிறுத்தப்போவதாக அறிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. தற்சமயம் அமேசான் நிறுவனத்தை தொடர்ந்து மைக்ரோசாப்ட் நிறுவனமும் தனது முக அங்கீகார தொழில்நுட்பத்தை காவல் துறையினர் பயன்படுத்த தடை விதித்து இருக்கிறது.
Tags:    

Similar News