செய்திகள்
பட்டாசுகள்

தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க 70 பேர் விண்ணப்பம்- ஈரோடு மாவட்ட வருவாய் அதிகாரி தகவல்

Published On 2021-09-30 08:20 GMT   |   Update On 2021-09-30 08:20 GMT
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க 70 பேர் விண்ணப்பித்து உள்ளதாக, ஈரோடு மாவட்ட வருவாய் அதிகாரி முருகேசன் தெரிவித்து உள்ளார்.
ஈரோடு:

தீபாவளி பண்டிகை வருகிற நவம்பர் மாதம் 4-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகையின்போது ஜவுளி, பட்டாசு, இனிப்பு வகைகள் மும்முரமாக நடைபெறும். இதில் பட்டாசு கடை அமைக்க பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் பின்பற்றப்பட வேண்டும். எனவே உரிய அனுமதி பெற்ற பிறகே தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. இதற்காக ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.

ஈரோடு மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடைகள் அமைப்பதற்கான விண்ணப்பங்கள் மாவட்ட வருவாய் அதிகாரி முருகேசனுக்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். அவர் கள ஆய்வுக்காக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, மாவட்ட தீயணைப்பு அதிகாரிக்கு அனுப்பி வைத்து பாதுகாப்பு அம்சம் குறித்து உறுதி செய்யப்படும். அதன்பிறகு மாவட்ட வருவாய் அதிகாரி நேரில் ஆய்வு செய்து அனுமதி வழங்குவார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு கடைகள் அமைக்க விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து மாவட்ட வருவாய் அதிகாரி முருகேசன் கூறியதாவது:-

ஈரோடு மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க 70 விண்ணப்பங்கள் பெறப்பட்டு உள்ளன. இதில் 50 விண்ணப்பங்கள் உரிய ஆவணங்களுடன் இணைக்கப்பட்டு உள்ளதால், கூட்டு விசாரணைக்காக பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. வருகிற 30-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அக்டோபர் மாதம் 15-ந் தேதிக்குள் களஆய்வு செய்து அனுமதி வழங்கப்படும்.

கடந்த ஆண்டு 110 பட்டாசு கடைகள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டது. இந்த ஆண்டுக்கான விண்ணப்பங்கள் சற்று குறைவாக காணப்படுகிறது. பட்டாசு கடைகள் அமைக்கப்பட்ட பிறகு, பாதுகாப்பற்ற நிலை இருந்தால், உடனடியாக கடைக்கான உரிமம் ரத்து செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News