ஆன்மிகம்
ராமேசுவரம் கடல், தீர்த்த கிணறுகளில் புனித நீராடலாம்

ராமேசுவரம் கடல், தீர்த்த கிணறுகளில் புனித நீராடலாம்

Published On 2021-04-20 07:40 GMT   |   Update On 2021-04-20 07:40 GMT
தனுஷ்கோடிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு இருப்பதாகவும், ராமேசுவரம் அக்னிதீர்த்த கடலில் பக்தர்கள் புனித நீராட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை பரவல் தடுப்பு தொடர்பாக அரசின் உத்தரவின்படி மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் ஆகியோர் கூட்டாக நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஞாயிற்றுக்கிழமை பொது ஊரடங்கு, இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை ஊரடங்கு, பொது போக்குவரத்துக்கு தடை உள்ளிட்ட உத்தரவுகள் பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவை மாவட்டத்தில் தீவிரமாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் சுற்றுலா தலமான தனுஷ்கோடிக்கு செல்ல தடைவிதிக்கப்பட்டு உள்ளது. இதேபோன்று அரியமான், காரங்காடு, ஏர்வாடி கடற்கரை பகுதிகளுக்கும் ஆட்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

ராமேசுவரம் அக்னி தீர்த்த கடற்கரை மற்றும் ராமநாதசுவாமி கோவிலில் உள்ள 21 தீர்த்த கிணறுகள் சுற்றுலாத்துைற கட்டுப்பாட்டிற்குள் வராது என்பதால் சமூக இடைவெளியுடன் புனித நீராட அனுமதிக்கப்படுவார்கள். வணிக வளாகங்கள், டீக்கடைகள், பலசரக்கு கடைகள் உள்ளிட்டவை இரவு 9 மணிக்கு மேல் திறக்கக்கூடாது.

கொரோனா தடுப்பு விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கும் வகையில் காவல்துறை, வருவாய்த்துறை, சுகாதாரத் துறை உள்ளிட்ட துறைகளின் அதிகாரிகளைக் கொண்டு 50 இடங்களில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினார். அப்போது வருவாய் கோட்டாட்சியர் சுகபுத்ரா உடன் இருந்தார்.
Tags:    

Similar News