செய்திகள்
மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தை நடத்த தயார் - மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா பேட்டி

Published On 2020-11-21 20:24 GMT   |   Update On 2020-11-21 20:24 GMT
பாராளுமன்ற குளிர் கால கூட்டத்தொடரை நடத்த தயார் என்று மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா கூறினார்.
புதுடெல்லி:

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வழக்கமாக நவம்பர் மாதம் கடைசி வாரம் தொடங்கும். டிசம்பரில் முடியும். இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் மூன்றாவது அலையால் டெல்லி தவித்து வருவதால் குளிர்கால கூட்டத்தொடர் நடக்குமா என்ற கேள்வி எழுந்தது. இதற்கு முன்பு 1975, 1979, 1984 என 3 முறை குளிர் கால கூட்டத்தொடர்கள் நடைபெறாத வரலாற்றை நாடாளுமன்றம் சந்தித்துள்ளது.

இந்தநிலையில் மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா டெல்லியில் நேற்று நிருபர் களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

பாராளுமன்ற மழைக் கால கூட்டத்தொடர், கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு மத்தியில் அனைத்து முன்எச்சரிக்கை நடவடிக்கைகளுடன் நடத்தப்பட்டது. பாராளுமன்ற நிலைக்குழுக்கள் தவறாமல் கூடி வருகின்றன.

குளிர்கால கூட்டத்தொடரை நடத்துவதற்கு மக்களவை செயலகம் தயார். எப்போது நடத்துவது என்பதை பாராளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய மந்திரிகள் குழுதான் முடிவு செய்யும். இந்தக்குழுதான் பாராளுமன்ற அமர்வுகளின் தேதிகளை முடிவு செய்யும். இதில் அரசு, எதிர்க்கட்சிகளுடனும் கலந்து பேசும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும், வரும் 25-ந் தேதி முதல் நாட்டில் உள்ள அனைத்து மாநில சட்டசபை சபாநாயகர்களின் 2 நாள் கூட்டம் வதோதரா அருகேயுள்ள கெவாடியாவில் (குஜராத்) நடப்பதாகவும், இதில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்து கொள்வதாகவும், பிரதமர் மோடியும் பங்கேற்று பேசுவதாகவும் மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா தெரிவித்தார்.

இந்த கூட்டத்துக்கான கருப்பொருள், ‘சட்டசபை, நிர்வாகம், நீதித்துறை ஆகியவற்றுக்கு இடையேயான இணக்கமான ஒருங்கிணைப்பு-ஒரு துடிப்பான ஜனநாயகத்துக்கான திறவுகோல்’ எனவும் அவர் குறிப்பிட்டார்.
Tags:    

Similar News