செய்திகள்
சமூக ஆர்வலர் ஷேலா ரஷீத்

சமூக ஆர்வலர் ஷேலா ரஷீத் மீது தேசத்துரோக வழக்கு- டெல்லி போலீஸ் நடவடிக்கை

Published On 2019-09-07 06:41 GMT   |   Update On 2019-09-07 06:41 GMT
காஷ்மீர் குறித்து தவறான தகவலை பரப்புவதாக கூறி சமூக ஆர்வலர் ஷேலா ரஷீத் மீது தேசத்துரோக வழக்கை டெல்லி போலீசார் பதிவு செய்துள்ளனர்.

புதுடெல்லி:

காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த மாதம் 5-ந்தேதி ரத்து செய்தது. அதோடு மாநில அங்கீகாரத்தை நீக்கும் வகையில் 2 யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டது.

இதையொட்டி முன் எச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவு போடப்பட்டது. மாநில முழுவதும் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டன.

இந்த நிலையில் காஷ்மீரில் மனித உரிமைகள் மீறப்படுவதாகவும், ராணுவத்தினர் அத்துமீறி சோதனையிடுவதாகவும் விசாரணை என்ற பெயரில் ஆண்கள் அலைக்கழிக்கப்படுவதாகவும், சமூக ஆர்வலரும், காஷ்மீர் மக்கள் இயக்க நிர்வாகியுமான ஷேலா ரஷீத் குற்றம் சாட்டியுள்ளார். மக்கள் அதிக அளவில் துன்புறுத்தலுக்கு ஆளாவதாகவும் புகார் கூறினார். இதை ராணுவம் மறுத்து இருந்தது.

இந்த நிலையில் ஷேலா ரஷீத் அடிப்படை ஆதாரமின்றி பொய்யான தகவல்களை பரப்புகிறார் என்று அவர் மீது சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஸ்ரீவத்சா டெல்லி போலீசில் புகார் அளித்தார்.

இதையடுத்து ஷேலா ரஷீத் மீது தேச துரோகம், கலவரத்தை தூண்டுவது, நாட்டின் அமைதியை சீர் குலைப்பது உள்பட பல்வேறு பிரிவுகளில் டெல்லி போலீசின் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து ஷேலா ரஷீத் கூறும்போது, “என்னை அமைதியாக இருக்குமாறு அற்பத்தனமான முயற்சியில் ஈடுபடுகிறார்கள். இது முழுக்க முழுக்க அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகும்” என்றார்.

Tags:    

Similar News